சின்னசேலத்தில் ஏரியில் மூழ்கி பள்ளி மாணவன் பலி

சின்னசேலத்தில் நண்பர்களுடன் குளித்த போது பள்ளி மாணவன் ஏரியில் மூழ்கி உயிரிழந்தான். இந்த பரிதாப சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
சின்னசேலத்தில் ஏரியில் மூழ்கி பள்ளி மாணவன் பலி
Published on

சின்னசேலம்,

சின்னசேலம் காந்திநகரை சேர்ந்தவர் ராஜா, தொழிலாளி. இவரது மனைவி உமா. இவர்களுக்கு கோபிகா (வயது 12) என்ற மகளும், நிதிஷ்குமார் (10) என்ற மகனும் உள்ளனர். கோபிகா சின்னசேலத்தில் உள்ள தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பும், நிதிஷ்குமார் காந்திநகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 5-ம் வகுப்பும் படித்து வந்தனர்.

நேற்று முன்தினம் ராஜாவும், உமாவும் வெளியூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றனர். வீட்டில் கோபிகாவும், நிதிஷ்குமாரும் இருந்தனர். இந்த நிலையில் நிதிஷ்குமார் அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர்களுடன், அம்சாகுளம் பஸ் நிறுத்தம் அருகில் உள்ள ஏரிக்கு குளிக்க சென்றான்.

அங்கு அவன் நண்பர்களுடன் குளித்துக்கொண்டிருந்தான். அப்போது நிதிஷ்குமார் ஆழமான பகுதிக்கு சென்றதாக தெரிகிறது. இதில் அவன் தண்ணீரில் மூழ்கினான். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவனது நண்பர்கள் காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என்று கூச்சலிட்டனர். இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து, ஏரிக்குள் இறங்கி தேடினர். நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு நிதிஷ்குமாரை பிணமாக மீட்டனர்.

இதுபற்றி அறிந்த உறவினர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து நிதிஷ்குமாரின் உடலை பார்த்து கதறி அழுதனர். இதுகுறித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏரியில் மூழ்கி பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com