ஜெருசலேம் புனித பயணம் செல்ல கிறிஸ்தவர்கள் விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் சி.கதிரவன் தகவல்

ஜெருசலேம் புனித பயணம் செல்ல கிறிஸ்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தெரிவித்து உள்ளார்.
ஜெருசலேம் புனித பயணம் செல்ல கிறிஸ்தவர்கள் விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் சி.கதிரவன் தகவல்
Published on: 

ஈரோடு,

ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:

தமிழ்நாட்டை சேர்ந்த கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்வதற்காக தமிழக அரசால் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி ஒவ்வொருவருக்கும் தலா ரூ.20 ஆயிரம் வழங்கப்படுகிறது. இந்த நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் கிறிஸ்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இதில் 50 கன்னியாஸ்திரிகள், அருட்சகோதரிகள் உள்பட 600 கிறிஸ்தவர்கள் புனித பயணம் மேற்கொள்ள அரசால் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இந்த புனித பயணம் இஸ்ரேல், எகிப்து மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளில் உள்ள பெத்லஹேம், ஜெருசலேம், நாசரேத், ஜோர்டான் நதி, கலிலேயா சமுத்திரம் மற்றும் கிறிஸ்தவ மத தொடர்புடைய பிற புனித தலங்களையும் உள்ளடக்கியது. வருகிற அக்டோபர் மாதம் முதல் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை இந்த புனித பயணம் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டு உள்ளது. பயணக்காலம் 10 நாட்கள் ஆகும்.

இதற்கான விண்ணப்பப்படிவம் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகங்களில் இருந்து கட்டணமின்றி பெறலாம். மேலும் www.bcmbcmw.tn.gov.in என்ற இணைய தள முகவரியில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த திட்டத்திற்கான நிபந்தனைகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் அனைத்தும் உரிய இணைப்புகளுடன் அஞ்சல் உறையில் கிறிஸ்தவர்களின் ஜெருசலேம் புனித பயணத்திற்கான நிதி உதவி கோரும் விண்ணப்பம் 20192020 என்று குறிப்பிட வேண்டும்.

விண்ணப்பத்தினை ஆணையாளர், சிறுபான்மையினர் நலத்துறை, கலசமஹால் பாரம்பரிய கட்டிடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை 600 005 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். வருகிற 30ந் தேதி வரை விண்ணப்ப படிவங்களை பெற்றுக்கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தெரிவித்து உள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com