

நாமக்கல்:
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி நேற்று நாமக்கல்லில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் கூட்டு திருப்பலி நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
சிறப்பு பிரார்த்தனை
உலகம் முழுவதும் கிறிஸ்தவர்களால் டிசம்பர் மாதம் 25-ந் தேதி கிறிஸ்துமஸ் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு கிறிஸ்துமஸ் பண்டிகை நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி கிறிஸ்தவர்கள் தங்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு கேக் வழங்கி இயேசு கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடினர். மேலும் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் திருப்பலி நிகழ்ச்சிகளும் நடந்தது.
இதன் ஒரு பகுதியாக நாமக்கல்லில் துறையூர் சாலையில் உள்ள கிறிஸ்து அரசர் தேவாலயம், சேலம் சாலையில் உள்ள அசெம்பிளி ஆப் காட் சபை மற்றும் திருச்சி சாலையில் உள்ள தமிழ் பாப்திஸ்து திருச்சபையில் சிறப்பு பிரார்த்தனை நடந்தன. இதில் நாமக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவர்கள் புத்தாடை அணிந்து கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
திருப்பலி
இதற்கிடையே கிறிஸ்து அரசர் தேவாலயத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவில் பங்கு தந்தை ஜான் அல்போன்ஸ் தலைமையில் கூட்டு திருப்பலி நடந்தது. அதைத்தொடர்ந்து அதிகாலை 3 மணி முதல் 5 கட்டமாக கிறிஸ்துமஸ் பெருவிழா திருப்பலி நிகழ்ச்சிகள் நடந்தது.
இதையொட்டி தேவாலயத்தின் முன்பு கிறிஸ்துமஸ் குடில் அமைக்கப்பட்டதோடு, கிறிஸ்து அரசர் ஆலயம் பல வண்ண மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. அங்கு அமைக்கப்பட்டு இருந்த குடில் முன்பு கிறிஸ்தவர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி குழந்தை இயேசுயை வணங்கி சென்றனர். மேலும் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி நேற்று நாமக்கல்லில் உள்ள பேக்கரிகள், பலகார கடைகளில் கேக் மற்றும் இனிப்பு வகை விற்பனை களைகட்டியது.