முறையாக குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

துறையூர் அருகே முறையாக குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
முறையாக குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
Published on

துறையூர்,

துறையூர் அருகே உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் காமாட்சிபுரம் ஊராட்சியில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை. இதனால் காமாட்சிபுரம் கிராமத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டது. இதன்காரணமாக இந்த கிராம மக்கள் குடிநீர் கிடைக்காமல் மிகவும் அவதி அடைந்தனர்.

இதுகுறித்து இப்பகுதி பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தனர். ஆனால் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் நேற்று காலிக்குடங்களுடன் துறையூர்-புளியஞ்சோலை சாலையில் திரண்டனர்.

பின்னர் அவர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ரேவதி மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் பொதுமக்களை சமரசம் செய்து, விரைவில் முறையாக குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com