மகளிர் அழகு நிலையத்தில் பணிபுரிந்த, இளம்பெண் சாவில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் சாலை மறியல் - 45 பேர் கைது

மகளிர் அழகு நிலையத்தில் பணிபுரிந்த இளம்பெண்ணின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி கோவை அரசு ஆஸ்பத்திரி முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்கள் 45 பேரை போலீசார் கைது செய்தனர்.
மகளிர் அழகு நிலையத்தில் பணிபுரிந்த, இளம்பெண் சாவில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் சாலை மறியல் - 45 பேர் கைது
Published on

கோவை,

கோவை அருகே சூலூரை அடுத்த இடையர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பத்மநாபன். இவரது மகள் சோபனா (வயது 25). இவர் பாப்பம்பட்டி பிரிவில் உள்ள ஒரு தனியார் அழகு நிலையத்தில் பணிபுரிந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை அழகு நிலையத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சோபனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அந்த பெண் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை சோபனாவின் உறவினர்கள் கோவை அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் குவிந்தனர். பின்னர் அவர்கள் சோபனாவின் சாவில் மர்மம் உள்ளது. அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். எனவே இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்று கூறி அங்கிருந்த போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் அவர்கள் திடீரென்று கோவை அரசு ஆஸ்பத்திரி முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த ரேஸ்கோர்ஸ் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பெண்ணின் உறவினர்கள் கூறியதாவது:-

சோபனாவின் சாவில் மர்மம் உள்ளது. அழகு நிலையம் மற்றும் அதன் அருகில் உள்ள வணிக வளாகங்களில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறினர். தொடர்ந்து அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 45 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து சோபனாவின் உடலை உறவினர்கள் பெற்றுக்கொண்டனர். மேலும் கைது செய்யப்பட்டவர்களையும் போலீசார் விடுவித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com