சேலம் மாவட்டத்தில் ஜவுளி பூங்கா அமைப்பதற்கு ரூ.2½ கோடி மானியம் வழங்கப்படும் கலெக்டர் தகவல்

சேலம் மாவட்டத்தில் ஜவுளி பூங்கா அமைப்பதற்கு ரூ.2½ கோடி மானியம் வழங்கப்படும் ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் ரோகிணி தெரிவித்தார்.
சேலம் மாவட்டத்தில் ஜவுளி பூங்கா அமைப்பதற்கு ரூ.2½ கோடி மானியம் வழங்கப்படும் கலெக்டர் தகவல்
Published on

சேலம்,

சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைப்பதற்காக முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு எம்.எல்.ஏ. சக்திவேல் முன்னிலை வகித்தார். மாவட்ட கலெக்டர் ரோகிணி தலைமை தாங்கி பேசும்போது கூறியதாவது:-

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முயற்சியால் சேலம் மாவட்டத்தில் சிறிய அளவிலான ஜவுளிப் பூங்காக்களை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் ஜவுளி உற்பத்தியாளர்கள், சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. சிறிய அளவிலான ஜவுளி பூங்கா அமைப்பதற்கு உட்கட்டமைப்பிற்கான செலவினத் தொகையில் 50 சதவீதம் அல்லது ரூ.2 கோடி மானியமாக மாநில அரசு வழங்கவுள்ளது.

ஒவ்வொரு சிறிய ஜவுளி பூங்காவும் ஒரு சிறப்பு நோக்க முகமையினை பதிவு செய்திருக்க வேண்டும். முதலீட்டாளர்கள் சிறப்பு நோக்க முகமையினை அங்கம் வகிக்கவும், அதற்கான தனது பங்கினை அளிக்கவும் எழுத்து மூலமாக விருப்பம் தெரிவித்தல் வேண்டும். குறைந்தபட்சம் 10 தொழிற்கூடங்களுடன், குறைந்த பட்சமாக 10 ஏக்கர் நிலத்தில் அமைக்கப்பட வேண்டும். நிலமானது சிறப்புநோக்க முகமை பெயரில் பதிவு செய்திருக்க வேண்டும். நிலம், தொழிற்சாலை கட்டிடம், எந்திரம் மற்றும் தளவாடங்களுக்கு செய்யப்படும் முதலீடானது உட்கட்டமைப்பு வசதிக்கு செலவிடப்படும் முதலீட்டை விட இரண்டு மடங்கு அதிகமாக இருத்தல் வேண்டும். சிறப்பு நோக்க முகமையில் அரசின் பிரதிநிதி ஒருவர் இடம் பெற்றிருக்க வேண்டும். பூங்காவின் பெயரில் தேசிய வங்கியில் கணக்கு தொடங்கப்பட்டிருக்க வேண்டும். பூங்கா அமைப்பதற்கு மானியம் மூன்று தவணைகளில் விடுவிக்கப்படும். மேலும் சிறப்பு நோக்க முகமை ஒவ்வொரு முறையும், மானியம் விடுவிக்க கோரிக்கை சமர்ப்பிக்கும் போது தொடர்புடைய ஆவணங்கள், ரசீதுகள், ஒப்பந்த பத்திரங்கள் உடன் சமர்ப்பிக்க வேண்டும்.

சிறிய அளவிலான ஜவுளி பூங்கா அமைப்பதற்கு நிலம், உள்கட்டமைப்பு வசதிகளான சாலை வசதி, சுற்றுசுவர், கழிவுநீர் வாய்க்கால் அமைத்தல், நீர் வினியோகம், தெருவிளக்கு அமைத்தல், மின்சாரவசதி மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், தொலைதொடர்பு வசதி போன்றவைகளும், ஆய்வு கூடம், வடிவமைப்பு மையம், வியாபார மையம், கிடங்குவசதி, மூலப்பொருட்கள் மையம், குழந்தைகள் காப்பகம், உணவகம், பணியாளர்கள் விடுதி அலுவலகம் மற்றும் இதர இனங்களான உற்பத்தி தொடர்பான தொழிற்கூடங்கள், எந்திரங்கள், தளவாடங்கள் மற்றும் திட்ட மதிப்பீடு ஆகிய இனங்கள் மட்டுமே அரசின் மானியத்தை பெறத் தகுதியான முதலீடாகக் கருதப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com