

நெய்வேலி
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனை கைது செய்து புழல் சிறையில் அடைக்கப்பட்டதை கண்டித்தும், அவரை விடுதலை செய்யக்கோரியும், தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடத்தியதை கண்டித்தும் நெய்வேலி என்.எல்.சி. ஆர்ச் கேட் எதிரே சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட செயலாளர் பஞ்சமூர்த்தி தலைமையில் அக்கட்சியினர் நேற்று மதியம் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கைது செய்யப்பட்ட வேல் முருகனை விடுதலை செய்யவேண்டும். தூத்துக்குடி துப்பாக்கி சூட்டுக்கு காரணமான அனைவரையும் கைது செய்ய வேண்டும். துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவர் மூலம் விசாரணை ஆணையம் அமைக்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள். இதுபற்றி தகவல் அறிந்த நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாவட்ட செயலாளர் பஞ்சமூர்த்தி, மாநில பொறுப்பாளர்கள் அரங்கநாதன், அருண்குமார், மாவட்ட தலைவர் முருகன், தொகுதி செயலாளர்கள் சிவக்குமார், சுந்தர், மாவட்ட பொறுப்பாளர்கள் உக்கிரவேல், பாலமுருகன், ஒன்றிய செயலாளர்கள் அய்யப்பன், நவநீதராமன் மற்றும் தொழிலாளர் வாழ்வுரிமை சங்கத்தினர் உள்ளிட்ட 156 பேரை கைது செய்து, வட்டம் 20-ல் உள்ள என்.எல்.சி. திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
பரங்கிப்பேட்டை ஒன்றிய தமிழக வாழ்வுரிமை கட்சியினர் கடலூர்-சிதம்பரம் சாலையில் பு.முட்லூரில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
இது பற்றி தகவல் அறிந்ததும் பரங்கிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து, மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார் மறியலை கைவிட்டு கலைந்து செல்லுமாறு எச்சரிக்கை விடுத்தனர்.
இருப்பினும் தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட பரங்கிப்பேட்டை ஒன்றிய செயலாளர்கள் கோபு(மேற்கு), சரவணன்(கிழக்கு), முன்னாள் நகரசபை தலைவர் ரமேஷ், மாவட்ட துணை செயலாளர்கள் ராஜேந்திரன், கணேசன், மாவட்ட செயலாளர் முடிவண்ணன் உள்பட 64 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் அனைவரும் பு.முட்லூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
பண்ருட்டி-சேலம் சாலையில் அங்குசெட்டிப்பாளையத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி பண்ருட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் பாலமுருகன் தலைமையில் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது பற்றி தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பாலமுருகன், ஒன்றிய தலைவர் விஜயகாந்த், செயலாளர் தேவராசு, ஜெயபிரகாஷ், மகளிரணி மாவட்ட செயலாளர் சந்திரா உள்ளிட்டோரையும், புதுப்பேட்டை கடைவீதியில் மறியலில் ஈடுபட்ட மாவட்ட தலைவர் சுரேந்தர், ஒன்றிய செயலாளர்கள் நாராயணன், சிவா, முத்துக்குமரன், நகர செயலாளர் மணிகண்டன், ஆறுமுகம் உள்ளிட்டோரையும் கைது செய்தனர். 2 இடங்களிலும் மொத்தம் 46 பேரை புதுப்பேட்டை போலீசார் கைது செய்தனர்.