

மதுரை,
ஸ்ரீவில்லிபுத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ. தாமரைக்கனியின் மகன் ஆணழகன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
ஜெயலலிதா உயிரோடு இருந்த காலத்தில் அவருடைய உறவினர்களை அரசியலில் பங்கேற்க அனுமதிக்கவில்லை. அவரது திடீர் இறப்பு அரசு மற்றும் கட்சி நிர்வாகத்தில் பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தி உள்ளது. ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் இருந்தபோது அவரை பார்க்க யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. அங்கு என்ன நடந்தது என்பது பற்றி சசிகலா தரப்பினருக்கும், ஆஸ்பத்திரி நிர்வாகத்துக்கும் தான் தெரியும். அவருக்கு பிறகு முதல்அமைச்சராகும் வாய்ப்பு ஓ.பன்னீர்செல்வத்துக்கு கிடைத்தது. வார்தா புயல், ஜல்லிக்கட்டு போன்ற பிரச்சினைகளை அவர் சுமுகமாக கையாண்டார். ஜெயலலிதாவால் அறிமுகப்படுத்தப்பட்டவர் என்று மக்களும் அவரை ஆதரித்தனர்.
இந்தநிலையில் ஜெயலலிதாவிடம் பணிப்பெண்ணாக இருந்த சசிகலா முதல்அமைச்சராக வேண்டும் என்று ஆசைப்பட்டு, கட்சியின் பொதுச்செயலாளராக ஆனார். பின்னர் கட்டாயப்படுத்தி ஓ.பன்னீர்செல்வத்தை ராஜினாமா செய்யச் சொன்னார். முதல்அமைச்சராக சசிகலா முயற்சிகள் மேற்கொண்டார்.
இதனால் அ.தி.மு.க.வின் 129 எம்.எல்.ஏ.க்களை கூவத்தூர் நட்சத்திர ஓட்டலுக்கு கடத்தி தங்க வைத்தனர். சில எம்.எல்.ஏ.க்கள் ஓட்டலை விட்டு வெளியேறி ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு கொடுத்தனர்.
இந்தநிலையில் சொத்து குவிப்பு வழக்கில் கடந்த 14ந்தேதி சசிகலா மற்றும் உறவினர்களுக்கு தண்டனை வழங்கி சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது. இதையடுத்து தினகரன் அ.தி.மு.க.வின் துணைப்பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். பின்னர் தினகரன், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கட்டுப்பாட்டில் எம்.எல்.ஏக்கள் வைக்கப்பட்டனர். இதன்காரணமாக அவர்களால் தன்னிச்சையான முடிவு எடுக்க முடியவில்லை. இந்நிலையில், சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. நம்பிக்கை வாக்கெடுப்பின்போது பெரும்பாலானவர்கள் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரிக்கும் நிலை இருந்தது. ரகசியமாக வாக்கெடுப்பு நடக்காததால் அதற்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது.
தி.மு.க., காங்கிரஸ் போன்ற கட்சிகள் ரகசிய வாக்கெடுப்பை வலியுறுத்தின. ஆனால் சபாநாயகர் மறுத்துவிட்டார். தமிழகத்தில் இதேநிலை நீடித்தால் சிறைச்சாலையில் இருந்து வரும் உத்தரவு தான் செயல்படுத்தப்படும். குற்றவாளி ரிமோட் மூலம் அரசு நிர்வாகத்தை நடத்த வேண்டியநிலை ஏற்படும்.
எனவே சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பை செல்லாது என்று அறிவித்து, மீண்டும் சட்டசபையை கூட்டி ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கடந்த 18ந்தேதி சட்டசபை தலைவர், செயலாளர், கவர்னர் உள்ளிட்டவர்களுக்கு இமெயிலில் மனு அனுப்பினேன். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை. எனது மனு மீது உரிய நடவடிக்கை எடுத்து சட்டசபையை கூட்டி ரகசிய வாக்கெடுப்பு நடத்தி இந்த அரசு மெஜாரிட்டியை நிரூபிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.