

கோவை
கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 9-வது வீதிப் பகுதியில் புதிய கட்டிட பணி நடைபெற்று வருகிறது. இங்கு விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த சேட் மொய்தீன் (வயது 42) என்பவர் கட்டிட தொழிலாளியாக தங்கியிருந்து வேலை செய்து வந்தார்.
இதேபோல் கிருஷ்ணகிரியை சேர்ந்த துரை (60) என்பவரும் அங்கு தங்கியிருந்து கட்டிட வேலை செய்து வந்தார்.நேற்று இரவு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் குடிபோதையில் இருந்த துரை கத்தியால் சேட் மொய்தீனை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் வயிற்றுப்பகுதியில் கத்திக்குத்து பட்ட சேட் மொய்தீன் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். துரை தப்பி ஓடிவிட்டார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்சில் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் போகும் வழியிலேயே சேட் மொய்தீன் பரிதாபமாக இறந்தார்.இந்த கொலை குறித்து கோவை காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து துரையை தீவிரமாக தேடி வருகிறார்கள். இந்த பயங்கர கொலை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-