

கோவை,
கோவை அரசு கலைக்கல்லூரியில் பி.எஸ்சி. இயற்பியல், வேதியியல், விலங்கியல் உள்ளிட்ட பட்டப்படிப்புகளும், வணிகவியல், பி.ஏ. தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட 23 பட்டப்படிப்புகள் உள்ளன. சமீபத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. அதைத் தொடர்ந்து மாணவ-மாணவிகளுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதையடுத்து என்ஜினீயரிங் மற்றும் கலை அறிவியல் பட்டப்படிப்புகளுக்கு மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்தது. கொரோனா காரணமாக மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இதன்படி கோவை அரசு கலைக்கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பிற்கான கலந்தாய்வு நேற்று முன்தினம் தொடங்கியது. அன்று பொது பிரிவினருக்கு கலந்தாய்வு நடைபெற்றது. நேற்று சிறப்பு பிரிவினருக்கு கவுன்சிலிங் நடந்தது. இதில் கலந்து கொள்ள சில மாணவ- மாணவிகள் கல்லூரிக்கு நேரில் வந்தனர். அவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன இதில், தகுதியான மாணவ-மாணவிகளுக்கு அப்போதே மாணவர் சேர்க்கைக்கான ஆணை வழங்கப்பட்டது.
இது குறித்து கல்லூரி முதல்வர் சித்ரா கூறியதாவது:-
கொரோனா தொற்று ஏற்படுவதை தடுக்கும் வகையில் ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்த வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. மாணவ- மாணவிகளுக்கான கவுன்சிலிங் தேதியை அவர்களது செல்போன் எண்ணிற்கு அனுப்பி உள்ளோம். அதன்படி இந்த கலந்தாய்வு நடக்கிறது. சிறப்பு பிரிவில் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், தேசிய மாணவர் படையினர், விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் தகுதியான நபர்களுக்கு சேர்க்கை ஆணை வழங்கப்பட்டது.
நேரில் வர முடியாத மாணவ-மாணவிகளின் சான்றிதழ்கள் வாட்ஸ்அப் மூலம் பெறப்பட்டு சரிபார்க்கப்பட்டு சேர்க்கை ஆணை ஆன்லைன் மூலம் வழங்கப்பட்டது. கல்லூரி கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளது. நாளை (அதாவது இன்று) பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறும். இதில் கலந்து கொள்ள மாணவர்களோ, பெற்றோரோ நேரில் வர வேண்டாம் ஆன்லைன் மூலம் அனைத்து பணிகளையும் மேற்கொள்ள முடியும். இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக கலந் தாய்வுக்கு வந்த மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர் சமூக இடைவெளி விட்டு அமர்ந்திருந்தனர்.