காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்மழை: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 7,700 கனஅடியாக அதிகரிப்பு

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்மழை பெய்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 7 ஆயிரத்து 700 கனஅடியாக அதிகரித்தது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்மழை: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 7,700 கனஅடியாக அதிகரிப்பு
Published on

பென்னாகரம்,

கர்நாடக மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அவ்வப்போது அதிகரித்தும், குறைந்தும் காணப்படுகிறது. மேலும் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்தும் தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கி உள்ளது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 7 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. நேற்று மதியம் 2 மணி நிலவரப்படி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வினாடிக்கு 7 ஆயிரத்து 700 கனஅடி தண்ணீர் வந்தது. இதனால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

இதனிடையே கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதை நுழைவுவாயில் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் இன்றி ஒகேனக்கல் வெறிச்சோடி காணப்பட்டது. சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லுக்கு வராத வகையில் மடம் சோதனைச்சாவடியில் போலீசார் தடுப்பு அமைத்து கண்காணித்து வருகின்றனர்.

மேலும் ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்தை காவிரி நுழைவிடமான கர்நாடக, தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com