

ஈரோடு
ஈரோடு கொரோனா கட்டுப்பாட்டு மையத்துக்கு ஒரே நாளில் 329 அழைப்புகள் வந்தன.
கொரோனா கட்டுப்பாட்டு மையம்
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகமாகி வருகிறது. புதிதாக கொரோனாவுக்கு பாதிக்கப்படுபவர்கள் சிகிச்சைக்காக எந்த ஆஸ்பத்திரிக்கு செல்வது, ஸ்கிரீனிங் மையத்துக்கு எப்படி செல்வது, எந்தெந்த ஆஸ்பத்திரிகளில் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு உள்ளது, எங்கு ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதிகள் உள்ளன போன்ற சந்தேகங்கள் எழுகிறது. இதற்கு வழிகாட்டுவதற்காக ஈரோடு மாவட்டத்தின் சார்பில் கொரோனா கட்டுப்பாட்டு மையம் (வார் ரூம்) அமைக்கப்பட்டு உள்ளது.
ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் செயல்படும் இந்த கட்டுப்பாட்டு மையத்தில் ஒரு டாக்டர், ஒரு மனநல ஆலோசகர், தாசில்தார் மற்றும் தன்னார்வலர்கள் என 10 பேர் கொண்ட குழுவினர் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் செயல்படுகிறார்கள்.
329 அழைப்புகள்
கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ள 10 செல்போன் எண்கள் வெளியிடப்பட்டு உள்ளன. அதில் தொடர்பு கொள்பவர்களுக்கு கொரோனா நோய் தொற்று தொடர்பான மருத்துவ ஆலோசனை, அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் உள்ள படுக்கை வசதிகள், முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் ஆகியன குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
அதன்படி கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்ட சில மணி நேரத்தில் இருந்தே பொதுமக்கள் தொடர்பு கொள்ள தொடங்கினார்கள். நேற்று முன்தினம் ஒரே நாளில் 329 அழைப்புகள் வந்தன.