

பொள்ளாச்சி
பொள்ளாச்சியில் 241 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதுடன் 2 முதியவர்கள் பலியானார்கள்.
241 பேர் பாதிப்பு
பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்தில் சூளேஸ்வரன்பட்டி, சமத்தூர், மாக்கினாம்பட்டி, ஜமீன்ஊத்துக்குளி, சின்னாம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 37 பேருக்கும், வடக்கு ஒன்றியத்தில் ஆச்சிப்பட்டி, நாதேகவுண்டன்புதூர், ஆ.சங்கம்பாளையம், நெகமம் உள்ளிட்ட பகுதிகளில் 30 பேருக்கும் பொள்ளாச்சி நகரில் மகாலிங்கபுரம், டி.கோட்டாம்பட்டி, வடுகபாளையம், வெங்கடேசா காலனி உள்ளிட்ட பகுதிகளில் 49 பேருக்கு கொரோனா உறுதியானது.
இதேபோன்று சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் 32 பேருக்கும், கிணத்துக்கடவு ஒன்றியத்தில் 38 பேருக்கும், வால்பாறையில் ஒருவருக்கும், ஆனைமலை ஒன்றியத்தில் 54 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
பொள்ளாச்சி, சுல்தான்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஒரே நாளில் 241 பேருக்கு கெரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
2 முதியவர்கள் பலி
மேலும் ஆனைமலை ஒன்றியம் காளியாபுரத்தில் 60 வயது முதியவரும், பொள்ளாச்சி முருகப்பா லே-அவுட் பகுதியை சேர்ந்த 86 வயது முதியவர் என 2 பேர் கொரோனாவுக்கு பலியானார்கள்.
இதையடுத்து அந்தப்பகுதியில் சுகாதாரத்துறையினர் கிருமி நாசினி தெளித்ததுடன், பிளீச்சிங் பவுடர் தூவி தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டனர். இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
கொரோனா பரிசோதனை
பொள்ளாச்சி பகுதியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை, வால்பாறை தாலுகாகளில் 9 இடங்களில் காய்ச்சல் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது.
இதில் 434 பேர் பயனடைந்தனர். அறிகுறி தென்பட்ட 169 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. தொற்று அதிகம் பாதித்த 32 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதி யாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும் பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில் தொற்று உறுதி செய்யப்பட்ட 682 பேர் வீடுகளின் தனிமைப்படுத்தி கொண்டு உள்ளனர். அவர்களையும் தினமும் கண்காணித்து வருகின்றோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.