தினசரி முட்டை உற்பத்தி 2 லட்சம் உயர்வு

நாமக்கல் மண்டலத்தில் தினசரி முட்டை உற்பத்தி சுமார் 2 லட்சம் உயர்ந்து உள்ளது.
தினசரி முட்டை உற்பத்தி 2 லட்சம் உயர்வு
Published on

நாமக்கல்,

நாமக்கல் மண்டலத்தில் 1,100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு 4 கோடிக்கும் மேற்பட்ட முட்டையின கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு ஏறத்தாழ 3 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. ஆனால் கோழிப்பண்ணை தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக சமீப காலமாக முட்டை உற்பத்தி சரிவடைந்த நிலையில் இருந்து வந்தது.

இந்த நிலையில் கடந்த மாதம் (ஜனவரி) தினசரி முட்டை உற்பத்தி சுமார் 2 லட்சம் வரை உயர்ந்து இருப்பது பண்ணையாளர்களை மகிழ்ச்சி அடைய செய்து உள்ளது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தின் படி, நாமக்கல் மண்டலத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நாள்ஒன்றுக்கு சராசரியாக 2 கோடியே 82 லட்சம் முட்டைகளும், நவம்பர் மாதம் 2 கோடியே 81 லட்சம் முட்டைகளும், டிசம்பர் மாதம் 2 கோடியே 80 லட்சம் முட்டைகளும் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளன.

கடந்த மாதம் (ஜனவரி) தினசரி சராசரியாக 2 கோடியே 82 லட்சம் முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளன. கடந்த டிசம்பர் மாதத்தை ஒப்பிடும் போது ஜனவரி மாதம் சுமார் 2 லட்சம் முட்டைகள் அதிகமாக உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது.

கடந்த மாதம் பனியின் தாக்கம் அதிகமாக இருந்ததால் முட்டை உற்பத்தி உயர்ந்து இருந்ததாகவும், இனிவரும் காலங்களில் கோடையின் தாக்கம் காரணமாக முட்டை உற்பத்தி குறைய வாய்ப்பு இருப்பதாகவும் பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

அதே நேரத்தில் முட்டை ஏற்றுமதி ஏறத்தாழ 62 லட்சம் வரை சரிவடைந்து இருப்பது பண்ணையாளர்களை கவலை அடைய செய்து உள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சராசரியாக 2 கோடியே 83 லட்சமாக இருந்த முட்டை ஏற்றுமதி, கடந்தமாதம் (ஜனவரி) 2 கோடியே 21 லட்சமாக குறைந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com