‘தினத்தந்தி’ புகார் பெட்டி

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
‘தினத்தந்தி’ புகார் பெட்டி
Published on

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

புகாருக்கு உடனடி தீர்வு

பாளையங்கோட்டை மேலகுலவணிகர்புரத்தை சேர்ந்தவர் அந்தோணிராஜ். இவர், ஜெபமாளிகை 1-வது தெரு சுடலை கோவில் அருகில் உள்ள பழுதடைந்த அடிபம்பை சரிசெய்யக்கோரி தினத்தந்தி புகார் பெட்டிக்கு அனுப்பிய பதிவு செய்தியாக பிரசுரமானது. இதற்கு உடனடி தீர்வாக அடிபம்பு சரிசெய்யப்பட்டு விட்டது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த தினத்தந்திக்கும், அதிகாரிகளுக்கும் அவர் நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துள்ளார்.

தெருவிளக்கு எரியவில்லை

நெல்லை மேலப்பாளையம் 31-வது வார்டு காமராஜர்புரத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு ஊரின் நுழைவு பகுதியில் உள்ள மின்விளக்குகள் பல மாதங்களாக எரியவில்லை. எனவே, தெருவிளக்குகள் எரிவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஏ.நாதன், காமராஜர்புரம்.

வாறுகாலில் தேங்கி கிடக்கும் கழிவுநீர்

திசையன்விளை தாலுகா கஸ்தூரிரெங்கபுரம் பஞ்சாயத்து சந்திமாடன் கோவில் மேலத்தெரு, கீழத்தெருக்களில் வாறுகாலில் கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, வாறுகாலில் கழிவுநீர் தேங்காமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

ஆ.உலகநாதன், கஸ்தூரிரெங்கபுரம்.

புகார் பெட்டி செய்தி எதிரொலி

தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் தாலுகா ஊத்துமலை பஞ்சாயத்துக்கு உட்பட்ட மறவர் காலனியை சேர்ந்தவர் மு.மனோஜ் குமார். இவர், மறவர் காலனியில் பஸ் உள்ளிட்ட வாகனங்கள் வேகமாக செல்வதாவும், எனவே, அங்கு வேகத்தடை அமைக்கக்கோரியும் தினத்தந்தி புகார் பெட்டிக்கு அனுப்பிய பதிவு செய்தியாக பிரசுரமானது. அதன் எதிரொலியாக அங்கு வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த தினத்தந்திக்கும், அதிகாரிகளுக்கும் அவர் நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துள்ளார்.

குடிநீர் குழாயில் உடைப்பு

செங்கோட்டை பிரானூர் பார்டர் பஞ்சாயத்து குற்றாலம் ரோட்டில் குடிநீர் குழாய் உடைந்து கடந்த 2 நாட்களாக தண்ணீர் வீணாக செல்கிறது. இதனை அதிகாரிகள் கவனித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

நாணய கணேசன், செங்கோட்டை.

சுகாதாரக்கேடு

செங்கோட்டை அருகே உள்ள வடகரையில் இயங்கி வரும் தரம் உயர்த்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் வகையில் கழிவுநீர் தொட்டி நிரம்பி வெளியேறுகிறது. மேலும், கட்டிடங்களை சுற்றி, வெட்டப்பட்ட மரக்கிளைகளும் கிடக்கின்றன. சுத்தமில்லாத கழிவறைகளால் பொதுமக்கள் முகம் சுழிக்கும் நிலைதான் உள்ளது. எனவே, சுகாதாரக்கேட்டை நீக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அப்துல் பாசித், வடகரை.

வாறுகால் மூடப்படுமா?

சிவகிரி மேலரதவீதி வலம்புரி விநாயகர் கோவில் அருகே கழிவுநீர் செல்வதற்காக வாறுகால் மேலே மூடப்பட்டிருந்த கற்கள் அகற்றப்பட்டு சரிசெய்யப்பட்டன. அதன் பின்னர் கடந்த 3 ஆண்டுகளாக இதுவரை மூடப்படவில்லை. இதனால் பள்ளிக் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் தவறி விழுகின்றனர். எனவே, வாறுகாலை மூடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

குட்டி ராசு, சிவகிரி.

சாலையோர அரிப்பு

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் இருந்து தைக்காவூர், தண்டுபத்து, வெள்ளாளன்விளை வழியாக செல்லும் பரமன்குறிச்சி சாலை போக்குவரத்து நிறைந்த சாலையாகும். இந்த சாலையில் சீயோன்நகர் அருக மழைக் காலத்தில் ஏற்பட்ட சாலையோர அரிப்பு மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. வாகனங்களுக்கு வழிவிடும்போது இருசக்கர வாகன ஓட்டிகள் பள்ளத்தில் தவறி விழுந்து காயம் அடைகின்றனர். எனவே, சாலையோர அரிப்பை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஸ்ரீராம், உடன்குடி.

ஆபத்தான மின்கம்பம்

ஆத்தூர் அருகே புன்னைசாத்தான் குறிச்சி கிராமத்தில் இருந்து மேல ஆத்தூர் ரோட்டில் வாய்க்கால் செல்லும் பாதையில் அமைந்துள்ள மின்கம்பத்தில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து காங்கிரீட் கம்பிகள் வெளியே தெரிகிறது. எனவே, ஆபத்தான மின்கம்பத்தை அகற்றி புதிய மின்கம்பம் வைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

வெங்கடேஷ், ஆத்தூர்.

நாய் தொல்லை

குலசேகரன்பட்டினத்தில் அனைத்து தெருக்களிலும் நாய் தொல்லை அதிகமாக உள்ளது. இறைச்சிக் கழிவுகள் ஆங்காங்கே கொட்டப்படுவதால் அதனை தின்பதற்கு நாய்கள் கூட்டமாக சுற்றித் திரிகின்றன. அப்போது அந்த வழியாக செல்லும் பொதுமக்களை கடிக்க வருவது போன்று பயமுறுத்துகின்றன. குறிப்பாக சிறுவர்கள் ரோட்டில் நடந்து செல்ல அச்சப்படுகின்றனர். எனவே, நாய் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முகம்மது சாலி, குலசேகரன்பட்டினம்.

X

Daily Thanthi
www.dailythanthi.com