‘தினத்தந்தி’ புகார் பெட்டி

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
‘தினத்தந்தி’ புகார் பெட்டி
Published on

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:

குழியை மூட வேண்டும்

நெல்லை மேலப்பாளையம் வசந்தாபுரம் தெற்கு தெரு திருப்பத்தில் குழி ஏற்பட்டுள்ளது. இதனால் மழை நேரத்தில் குழி இருப்பது தெரியாமல் பலர் அதில் விழுந்துள்ளனர். எனவே, அந்த குழியை மூடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிரகாஷ், சேரன்மாதேவி.

பயணியர் நிழற்கூடம்

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாலுகா சேர்ந்தமரம் கிராமத்தில் உள்ள தெற்கு பஸ்நிறுத்தம், வடக்கு பஸ்நிறுத்தம் ஆகிய இரண்டு இடங்களிலும் தினமும் ஏராளமான பயணிகள் வளியூர்களுக்கு நின்று பஸ் ஏறிச் செல்கின்றனர். ஆனால், இங்கு பயணியர் நிழற்கூடங்கள் இல்லை. இதனால் பயணிகள் வெயிலிலும், மழையிலும் நின்று சிரமப்பட வேண்டிய நிலை உள்ளது. ஆகவே, இந்த இரு பஸ்நிறுத்தங்களிலும் இருக்கை வசதியுடன் புதிதாக பயணியர் நிழற்கூடங்கள் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

கே.எம்.மணிகண்டன், சேர்ந்தமரம்.

ரெயில் சேவை

கொரோனா காரணமாக கடந்த 20 மாதங்களாக நிறுத்தப்பட்டிருந்த பயணிகள் ரெயில்கள் தற்போது சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில்களாக மதுரை, நெல்லையில் இருந்து செங்கோட்டைக்கு காலை நேரத்தில் இயக்கப்படுகிறது. பின்னர் மாலை நேரத்தில் செங்கோட்டையில் இருந்து ரெயில் புறப்பட்டு செல்கிறது. இது பயணிகள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தாலும், செங்கோட்டையில் இருந்து காலை நேரத்தில் ரெயில் இயக்கப்படாததால் பயணிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே, செங்கோட்டையில் இருந்து நெல்லை, மதுரைக்கு காலை நேரத்தில் ரெயில் இயக்கிட தெற்கு ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

ராஜீவ்காந்தி, செங்கோட்டை.

தெருவிளக்கு வசதி

கடையநல்லூர் தாலுகா அச்சன்புதூர் பேரூராட்சி 5-வது வார்டு மணக்காடு குளத்து பள்ளிவாசல் கீழ்புறம் தென் வடலாக அமைந்துள்ள தெருவில் 4 மின்கம்பங்கள் இருந்தும் அவற்றில் மின்விளக்குகள் இல்லை. இதனால் இரவு நேரம் அந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்படுவதால் மக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். அருகில் மயானம் மற்றும் புதர் மண்டிக் கிடப்பதால் விஷஜந்துக்கள் நடமாடுகின்றன. எனவே, மின்கம்பங்களில் மின்விளக்கு பொருத்திட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எம்.எஸ்.முகம்மது, அச்சன்புதூர்.

குண்டும் குழியுமான சாலை

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் இருந்து செட்டிகுளம் செல்லும் நெல்லை மெயின் ரோட்டில் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு சாலை குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, சாலைய சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

சிவா, பன்னம்பாறை.

சுகாதார வளாகம் கட்டப்படுமா?

கோவில்பட்டி பஜாரின் மையப்பகுதியில் கடலைக்கார தெரு அமைந்துள்ளது. அங்கு நீர்வரத்து ஓடையின் மேல் ஆண்கள், பெண்களுக்கான பொது சுகாதார வளாகம் இருந்தது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஆக்கிரமிப்புகளை அகற்றும்பாது சுகாதார வளாகம் இடிக்கப்பட்டு விட்டது. இதனால் சுற்று வட்டார கிராமங்களில் வரும் மக்கள், குறிப்பாக பெண்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். மேலும் ரோடு ஓரத்திலேயே ஆண்கள் அசுத்தம் செய்வதால் சுகாதாரக்கேடு ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே, மீண்டும் அங்கு சுகாதார வளாகம் கட்டிக் கொடுப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

நேதாஜி பாலமுருகன், கோவில்பட்டி.

பன்றி தொல்லை

உடன்குடி நகர பகுதியில் பன்றிகள் கூட்டமாக சுற்றித் திரிகிறது. மழைக் காலத்தில் ஆங்காங்கே தேங்கி கிடக்கும் குப்பைகள் மற்றும் கழிவு தண்ணீரில் இந்த பன்றிகள் படுத்து உருண்டு, பின்னர் எழுந்து ரோட்டின் குறுக்கே அங்கும் இங்கும் ஓடுவதால் வாகன ஓட்டிகளுக்கு இடையூறை ஏற்படுத்துகின்றன. எனவே, பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

ஸ்ரீராம், உடன்குடி.

X

Daily Thanthi
www.dailythanthi.com