பெரியார் சிலை சேதம்

விழுப்புரத்தில் பெரியார் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்களை கைது செய்யக்கோரி போராட்டம் நடத்தினர்.
பெரியார் சிலை சேதம்
Published on

விழுப்புரம்,

விழுப்புரம் நகரின் மையப்பகுதியான கீழ்பெரும்பாக்கம் பஜனை கோவில் தெருவில் பெரியார் சிலை உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவில் யாரோ மர்ம நபர்கள், அந்த இரும்புக்கூண்டின் பூட்டை உடைத்து அங்கிருந்த பெரியார் சிலையை சேதப்படுத்தியுள்ளனர். சிலையின் முகப்பகுதியான மூக்கு, நெற்றி, கன்னம் ஆகிய பகுதிகளில் சேதமடைந்துள்ளது. இதனை நேற்று மதியம் தந்தை பெரியார் படிப்பக பொறுப்பாளர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

போராட்டம்

இதுபற்றி தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று சேதமடைந்த பெரியார் சிலையை பார்வையிட்டு அருகில் உள்ள சி.சி.டி.வி. காட்சி பதிவுகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், சிலையை சேதப்படுத்தியவர்களை கைது செய்ய வலியுறுத்தியும் பெரியார் படிப்பக பொறுப்பாளர் ரவிச்சந்திரன் தலைமையில் நிர்வாகிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். உடனே போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை கலைத்தனர்.

சீரமைப்பு

அதன் பிறகு சிலை செய்யும் கலைஞர்கள், சிலையில் சேதப்படுத்தப்பட்ட பகுதியை சரிசெய்து வர்ணம் தீட்டினர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com