

விழுப்புரம்,
விழுப்புரம் மகாராஜபுரம் கணேஷ் நகரில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள சாலைகள் குண்டும்- குழியுமாக இருந்தன.
மேலும் கழிவுநீர் வாய்க்கால் வசதி இல்லாததால் சாக்கடை நீர், தெருக்களிலேயே வழிந்தோடுவதால் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் மிகவும் சிரமப்பட்டனர். இந்த சாலையை சீரமைக்கக்கோரியும், கழிவுநீர் வாய்க்கால் வசதி அமைக்கக்கோரியும் சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகளுக்கு அப்பகுதி பொதுமக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரையிலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
தற்போது மழை பெய்து வருவதால் கணேஷ் நகரில் உள்ள சாலைகள் மேலும் மோசம் அடைந்து வருகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள், இனியும் அதிகாரிகளை நம்பி எந்தவித பலனும் இல்லை என எண்ணி தாங்களாகவே முன்வந்து சாலையை சீரமைக்க முடிவு செய்தனர்.
இதற்காக அப்பகுதியை சேர்ந்த மக்கள் ஒவ்வொரு வீட்டை சேர்ந்தவர்களிடமும் இருந்து ரூ.300 வசூல் செய்து நேற்று டிராக்டர்கள் மூலம் கிராவல் மண் அடித்து குண்டும், குழியுமான சாலைகளை சீரமைத்தனர்.