

திருச்சி, மே.19-
திருச்சி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 16 பேர் உயிரிழந்தனர். புதிதாக 1,271 பேருக்கு தொற்று உறுதியானது.
புதிதாக 1,271 பேருக்கு கொரோனா
திருச்சி மாவட்டத்தில் தினமும் அச்சுறுத்தும் வகையில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 1,271பேருக்கு தொற்று உறுதியானது.
இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 39,803 ஆக அதிகரித்துள்ளது. தொடர் சிகிச்சையில் 8,542 பேர் உள்ளனர். 877 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 30,893 ஆகும்.
16 பேர் உயிரிழப்பு
திருச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தனியார், அரசு ஆஸ்பத்திரி மற்றும் பொன்மலை ரெயில்வே ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்ற 28 வயது இளம்பெண், 80,79,73,52 வயதுடைய 5 பெண்கள், 82, 75, 70, 67, 64, 60, 57, 55, 54, 34, வயதுடைய 11ஆண்கள் என 16 பேர் நேற்று ஒரே நாளில் உயிரிழந்தனர். இதன் மூலம் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 368 ஆக உயர்ந்தது.
445 படுக்கைகள் காலி
திருச்சி அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனா நோயாளிகள் சிகிச்சை அளிப்பதற்காக அவசர சிகிச்சை பிரிவில் 23 படுக்கைகள், சாதாரண படுக்கைகள்-290 மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர் படுக்கைகள் 132 என மொத்தம் 445படுக்கைகள் காலியாக உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.