

திருச்சி,
திருச்சி மாவட்டத்தில் உள்ள மொத்த ஊராட்சி ஒன்றியங்களின் எண்ணிக்கை 14. இவற்றில் உள்ள ஒன்றிய வார்டு கவுன்சிலர்களின் எண்ணிக்கை 241 ஆகும். நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற இந்த 241 ஒன்றிய கவுன்சிலர்களும் அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் நேற்று முன்தினம் பதவி ஏற்றுக்கொண்டனர்.
ஒன்றிய தலைவர் மற்றும் துணைத்தலைவர்களை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் வருகிற 11-ந்தேதி (சனிக்கிழமை) அந்தந்த ஒன்றிய அலுவலகங்களில் நடைபெற உள்ளது.
திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை அந்தநல்லூர் ஒன்றியத்தில் மொத்தம் உள்ள 15 வார்டுகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்று உள்ளது. மணிகண்டம் ஒன்றியத்தில் மொத்தம் உள்ள 14 வார்டுகளில் தி.மு.க. கூட்டணிக்கு 10 இடங்களும், அ.தி.மு.க. கூட்டணிக்கு 2 இடங்களும், சுயேச்சைகளுக்கு 2 இடங்களும் கிடத்துள்ளன.
திருவெறும்பூர் ஒன்றியத்தில் உள்ள 16 வார்டுகளில் தி.மு.க. கூட்டணிக்கு 9 இடங்களும், அ.தி.மு.க. கூட்டணிக்கு 4 இடங்களும், சுயேச்சைகளுக்கு 3 இடங்களும், மணப்பாறை ஒன்றியத்தில் உள்ள 17 வார்டுகளில் தி.மு.க. கூட்டணிக்கு 12 வார்டுகளும், அ.தி.மு.க. கூட்டணிக்கு 3 இடங்களும், சுயேச்சைகளுக்கு 2 வார்டுகளும், மருங்காபுரி ஒன்றியத்தில் உள்ள 19 வார்டுகளில் தி.மு.க. கூட்டணிக்கு 11 வார்டுகளும், அ.தி.மு.க. கூட்டணிக்கு 8 வார்டுகளும் கிடைத்துள்ளன.
இதுபோல் வையம்பட்டி ஒன்றியத்தில் உள்ள 16 வார்டுகளில் தி.மு.க. கூட்டணிக்கு 10 வார்டுகளும், அ.தி.மு.க. கூட்டணிக்கு 4 வார்டுகளும், சுயேச்சைகளுக்கு 2 வார்டுகளும், புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள 15 வார்டுகளில் தி.மு.க. கூட்டணிக்கு 11 வார்டுகளும், அ.தி.மு.க. கூட்டணிக்கு 4 இடங்களும், மண்ணச்சநல்லூர் ஒன்றியத்தில் உள்ள 23 வார்டுகளில் தி.மு.க. கூட்டணிக்கு 15 வார்டுகளும், அ.தி.மு.க. கூட்டணிக்கு 5 வார்டுகளும், சுயேச்சைகளுக்கு 3 வார்டுகளும் கிடைத்துள்ளன.
முசிறி ஒன்றியத்தில் உள்ள 18 வார்டுகளில் தி.மு.க. கூட்டணிக்கு 12 வார்டுகளும், அ.தி.மு.க. கூட்டணிக்கு 5 வார்டுகளும், சுயேச்சைக்கு ஒரு வார்டும், தொட்டியம் ஒன்றியத்தில் உள்ள 19 வார்டுகளில் தி.மு.க. கூட்டணிக்கு 11 வார்டுகளும், அ.தி.மு.க. கூட்டணிக்கு 6 வார்டுகளும், சுயேச்சைகளுக்கு 2 வார்டுகளும், தாத்தையங்கார் பேட்டை ஒன்றியத்தில் உள்ள 14 வார்டுகளில் தி.மு.க. கூட்டணிக்கு 10 வார்டுகளும், அ.தி.மு.க. கூட்டணிக்கு 4 வார்டுகளும், உப்பிலியபுரம் ஒன்றியத்தில் உள்ள 15 வார்டுகளில் தி.மு.க. கூட்டணிக்கு 8 வார்டுகளும், அ.தி.மு.க. கூட்டணிக்கு 2 வார்டுகளும், சுயேச்சை களுக்கு 5 வார்டுகளும் கிடைத்து உள்ளன.
எனவே இந்த 12 ஊராட்சி ஒன்றியங்களிலும் 11-ந்தேதி நடைபெற உள்ள மறைமுக தேர்தலில் தலைவர், துணை தலைவர் பதவிகளை தி.மு.க. எளிதாக கைப்பற்றும் நிலை உள்ளது.
லால்குடி ஒன்றியத்தில் மொத்தம் உள்ள 21 வார்டுகளில் தி.மு.க. கூட்டணி 10 வார்டுகளில் வெற்றி பெற்று உள்ளது. அ.தி.மு.க. கூட்டணி 8 இடங்களிலும், சுயேச்சைகள் 3 இடங்களிலும் வெற்றி பெற்று உள்ளனர். சுயேச்சைகள் ஆதரவுடன் அ.தி.மு.க. தலைவர், துணை தலைவர் பதவிகளை கைப்பற்றும் முயற்சியில் இறங்கியது. ஆனால் இதனை தி.மு.க. முறியடித்து விட்டதாகவும் சுயேச்சைகள் ஆதரவுடன் ஒன்றியத்தை பிடிக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்து விட்டதாகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இதே போல் துறையூர் ஒன்றியத்திலும் நடந்து உள்ளது. அங்கு மாத்தம் உள்ள 19 வார்டுகளில் தி.மு.க. கூட்டணி 9 இடங்களிலும், அ.தி.மு.க. 8 இடங்களிலும், 2 இடங்களில் சுயேச்சைகளும் வெற்றி பெற்றனர். இங்கும் சுயேச்சைகள் ஆதரவுடன் தலைவர், துண தலைவர் பதவிகளை பிடிப்பதற்கான முயற்சியில் தி.மு.க. தீவிரமாக இறங்கி உள்ளது.
அந்தநல்லூர் ஒன்றியத்தில் அ.தி.மு.க. ஒரு வார்டில் கூட வெற்றி பெறாதது அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த அதிர்ச்சியில் இருந்து அவர்கள் இன்னும் மீளவில்லை. ஏனென்றால் இந்த ஒன்றியம் அடங்கி உள்ள ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் தான் ஜெயலலிதா கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற பொது தேர்தலில் வெற்றி பெற்று முதல்- அமைச்சரானார். தற்போது இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான வளர்மதி தமிழக அமைச்சராக பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.