கைவிரல் ரேகை குறியீட்டு பதிவு எந்திரங்கள் திரும்ப ஒப்படைப்பு

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு வழங்கப்பட்ட 197 கைவிரல் ரேகை குறியீட்டு பதிவு எந்திரங்கள் திரும்ப ஒப்படைக்கப்பட்டன.
கைவிரல் ரேகை குறியீட்டு பதிவு எந்திரங்கள் திரும்ப ஒப்படைப்பு
Published on

சேலம்,

கூட்டுறவு கடன் சங்கம்


சேலம் மாவட்டத்தில் 197 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகின்றன. இந்த கடன் சங்கங்களில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பொது சேவை மையம் தொடங்கப்பட்டது. இந்த மையம் மூலம் சாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், வருமான சான்றிதழ், முதல் பட்டதாரி சான்றிதழ், விவசாய வருமான சான்று உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்களை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பெற்று வந்தனர்.

இதனிடையே, மாவட்டத்தில் உள்ள 197 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு எல்கார்ட் நிறுவனம் மூலம் கைவிரல் ரேகை குறியீட்டு பதிவு எந்திரங்கள் வழங்கப்பட்டன. இந்த எந்திரங்கள் பொது சேவை மையத்தில் கணினிகளை ஆபரேட்டர் செய்யும் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டது. இதன் மூலம் மட்டுமே அவர்கள் கணினியை இயக்க முடியும்.

முறைகேடு


இந்த எந்திரங்களில் போலி பில் மூலம் அதிக விலையை ஒட்டி வழங்கப்பட்டதாக சங்கங்களின் செயலாளர்கள் குற்றம் சாட்டினர். மேலும் எந்திரம் வழங்கியதில் லட்சக்கணக்கில் முறைகேடு நடந்துள்ளதாக அவர்கள் புகார் தெரிவித்து வந்தனர். இதற்கிடையில் எந்திரத்திற்கான தொகையை கடன் சங்கங்களிடம் இருந்து வசூலிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்தநிலையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் மாரிமுத்து தலைமையில் 197 பேர் நேற்று கைவிரல் ரேகை குறியீட்டு பதிவு எந்திரத்துடன் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள சேலம் மண்டல கூட்டுறவு சங்கங்கள் இணைப்பதிவாளர் அலுவலகத்துக்கு சென்றனர்.

திரும்ப ஒப்படைப்பு


அங்கு செயலாளர்கள் அனைவரும் ஒரு பெரிய அட்டை பெட்டிக்குள் 197 எந்திரங்களையும் வைத்து அலுவலகத்தில் திரும்ப ஒப்படைத்து விட்டனர்.

இதுகுறித்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் மாரிமுத்து கூறுகையில், இந்த முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும். இந்த எந்திரங்கள் அனைத்தையும் அதிகாரிகள் திரும்ப பெற்றுக் கொண்டு பணத்தை திரும்ப ஒப்படைக்க வேண்டும். இல்லையெனில் வருகிற 23ந் தேதி கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்துவோம் என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com