

கிருஷ்ணகிரி,
ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. பொங்கல் போனஸ் ரூ. 7 ஆயிரம் வழங்கிட வேண்டும், 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளின் பிரச்சினையால் ஏற்பட்டுள்ள இடர்பாடுகளை உடனடியாக கலைந்திட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் வட்ட செயலாளர் மணி தலைமை தாங்கினார். நெடுஞ்சாலைத்துறை ஊழியர் சங்க மாவட்ட தலைவர் கிருஷ்ணன், தொலைதொடர்புத்துறை ஊழியர் சங்க தர்மபுரி மாவட்ட தலைவர் அழகிரிசாமி ஆகியோர் பேசினார்கள். சங்கத்தின் மாவட்ட தலைவர் சந்திரன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். இதில் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள். முடிவில் வட்ட பொருளாளர் சக்திவேல் நன்றி கூறினார்.
தர்மபுரி
இதே போல் தர்மபுரி கலெக்டர் அலுவலகம் மற்றும் மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகங்கள் முன்பு நேற்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தர்மபுரியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட தலைவர் மணிவேல் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சுருளிநாதன், மாவட்ட துணைத்தலைவர் கனகராஜ் மற்றும் நிர்வாகிகள் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.
காரிமங்கலத்தில் வட்டதலைவர் நாகராஜன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைத்தலைவர் சிவப்பிரகாசம், மாவட்ட இணைசெயலாளர் ராஜேஸ்வரி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். இதேபோல் அரூரில் வட்டதலைவர் சுவாமிநாதன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைதலைவர்கள் யோகராசு, இளவேனில் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினார்கள்.
பென்னாகரம்
இதேபோல் பென்னாகரத்தில் வட்டதலைவர் லட்சுமி தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் சேகர் மாவட்ட இணைசெயலாளர் காவேரி மற்றும் நிர்வாகிகள் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். இதேபோல் பாலக்கோட்டில் வட்டத்தலைவர் குணசேகரன் தலைமையிலும், நல்லம்பள்ளியில் வட்டதலைவர் மோகன்ராஜ் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.