

தென்காசி:
முழு ஊரடங்கால் தென்காசி மாவட்டத்தில் சாலைகள் வெறிச்சோடின.
முழு ஊரடங்கு
தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தினமும் இரவுநேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைதோறும் முழு ஊரடங்கும் கடைபிடிக்கப்படுகிறது. முழு ஊரடங்கையொட்டி நேற்று தென்காசி மாவட்டங்களில் பொது போக்குவரத்து தடை செய்யப்பட்டதால் சாலைகள் வெறிச்சோடின. ஆஸ்பத்திரிக்கு சென்றவர்களும், திருமணத்துக்கு பத்திரிகையுடன் சென்றவர்களும் மட்டும் அனுமதிக்கப்பட்டனர்.
கடையநல்லூர்
கடையநல்லூர் தினசரி மார்க்கெட், பஸ் நிலையம், மெயின் பஜார், மெயின் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் அனைத்து கடைகளும் மூடப்பட்டதால் வெறிச்சோடியது. பால், மருந்து கடைகளும், பெட்ரோல் பங்குகளும் திறந்து இருந்தன. போலீசார் ரோந்து சென்று கண்காணித்தனர்.
செங்கோட்டை- சங்கரன்கோவில்
செங்கோட்டையில் பால், மருந்து கடைகளை தவிர அனைத்து கடைகளும் மூடிக்கிடந்தன. பஸ் நிலையம், மெயின் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் வாகன போக்குவரத்தின்றி காணப்பட்டது. அவசர தேவைக்கு மட்டும் சிலர் ஆட்டோ, கார்களில் ஆஸ்பத்திரிகளுக்கு சென்றனர். போலீசார் பல்வேறு பகுதிகளுக்கும் ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
சங்கரன்கோவிலில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. முழு ஊரடங்கை முன்னிட்டு சங்கரன்கோவிலில் உள்ள பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் கோவில் வாசல், தெற்குரதவீதி, வடக்கு ரதவீதி, கீழரதவீதி, நகைக்கடை பஜார் மற்றும் முக்கிய வீதிகளில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. போலீசார் ஆங்காங்கே கண்காணிப்பு பணிகள் ஈடுபட்டிருந்தனர். இதனால் ஆட்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.
பாவூர்சத்திரம்-சிவகிரி
பாவூர்சத்திரம் காமராஜர் தினசரி மார்க்கெட்டில் அனைத்து கடைகளும் திறக்கப்படாததால் வெறிச்சோடியது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் நெல்லை-தென்காசி மெயின் ரோட்டிலும் சில வாகனங்களே சென்றன.
சிவகிரி மெயின் பஜாரில் அனைத்து கடைகளும் மூடி கிடந்ததால் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.