தூத்துக்குடி மாவட்டத்தில் சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசனம் திரளான பக்தர்கள் வழிபாடு

தூத்துக்குடி மாவட்டத்தில் சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசனம் நேற்று நடந்தது. அதிகாலையிலேயே கோவில்களில் பக்தர்கள் திரளான வழிபாடு நடத்தினர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசனம் திரளான பக்தர்கள் வழிபாடு
Published on

தூத்துக்குடி

தூத்துக்குடியில் சங்கரராமேசுவரர் கோவிலில் திருவாதிரை திருவிழாவையொட்டி சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன. திருவெம்பாவை பாடல்கள் பாடப்பட்டு பூஜைகள் நடந்தன. விழாவின் 10-வது நாளான நேற்று திருவாதிரை திருவிழா நடந்தது. நேற்று அதிகாலையில் நடை திறக்கப்பட்டது. 3 மணிக்கு அபிஷேகம் நடந்தது. 4 மணிக்கு பல்வேறு பூக்களால் சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தன. காலை 6 மணிக்கு ஆருத்ரா தரிசனம் நடந்தது. தொடர்ந்து பசுதீபாராதனை, தாண்டவ தீபாராதனை, திருமுறை பாடுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவில் கோவில் நிர்வாக அதிகாரி அஜித் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.

கழுகுமலை

கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் ஆருத்ரா தரிசனம் நேற்று நடந்தது. இதனை முன்னிட்டு அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டது.

கோவில் தெற்கு வாசலில் நடராஜர்- சிவகாமி அம்பாளுக்கு 21 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு களி மற்றும் கருப்பு மை பிரசாதம் வழங்கப்பட்டன. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

எட்டயபுரம்

எட்டயபுரம் எட்டீசுவரமூர்த்தி கோவிலில் ஆருத்ரா தரிசனம் நடந்தது. அதிகாலையில் நடராஜர்- சிவகாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பின்னர் கோ பூஜை, நடராஜர் சப்பர பவனி நடந்தன. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ஆத்தூர்

ஆத்தூர் சோமசுந்தரி அம்பாள் உடனுறை சோமநாத சுவாமி கோவிலில் ஆருத்ரா தரிசனம் நடந்தது. அதிகாலையில் கும்ப பூஜை, சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. காலையில் சுவாமி நடராஜர் சப்பர பவனி நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

குலசேகரன்பட்டினம்

குலசேகரன்பட்டினம் அறம் வளர்த்த நாயகி அம்மன் உடனுறை காஞ்சி விஜய கச்சிகொண்ட பாண்டீசுவரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் நடந்தது. அதிகாலையில் நடராஜர், மாணிக்கவாசகருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு திருவாதிரை களி, கரும்புச்சாறு பிரசாதம் வழங்கப்பட்டது.

செய்துங்கநல்லூர்

செய்துங்கநல்லூர் சிவகாமி சமேத பதஞ்சலி வியாக்கிரபாதீசுவரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் நடந்தது. அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு, கணபதி ஹோமம், சிறப்பு பூஜைகள் நடந்தது. சிவபெருமான், சிவகாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.

தொடர்ந்து மாணிக்கவாசகர், காரைக்கால் அம்மையார், பதஞ்சலி, வியாக்கிரபாதீசுவரர் ஆகியோருக்கு நடராஜர் காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் நடராஜர் சப்பர பவனி நடந்தது. இரவில் சேர்க்கை பூஜை நடந்தது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com