

திண்டுக்கல்,
திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் இருந்து நேற்று முன் தினம் இரவு பாலக்காடு- சென்னை அதிவிரைவு ரெயில் புறப்பட்டது. அப்போது ரெயில் என்ஜின் அருகே ஒரு பெண் சந்தேகப்படும் வகையில் சென்று கொண்டிருந்தார். இதனை ரோந்து பணியில் ஈடுபட்ட ரெயில்வே போலீஸ்காரர்கள் வடிவேல், சவிதா ஆகியோர் பார்த்தனர். உடனே அந்த பெண்ணை தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.
விசாரணையில், அந்த பெண் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்வதற்கு வந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், ஒட்டன்சத்திரம் கருப்பணபுரத்தை சேர்ந்தவர் சீத்தாராமன். இவருடைய மனைவி கல்பனா (வயது 21). இவர்களுக்கு ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மிகுந்த மனவேதனை அடைந்த கல்பனா தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுத்துள்ளார்.
கணவர், குழந்தையை விட்டுவிட்டு திண்டுக்கல் ரெயில் நிலையத்துக்கு வந்துள்ளார். அப்போது பாலக்காடு- சென்னை அதிவிரைவு ரெயில் புறப்பட்டது. அதை பார்த்ததும் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்வதற்காக என்ஜின் அருகே கல்பனா வந்துள்ளார். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் அவரை பார்த்து விட்டதால் தற்கொலை முயற்சியை தடுத்து காப்பாற்றியதாக கூறினர்.
இதையடுத்து அவரை ரெயில்வே போலீஸ் நிலையத்துக்கு, போலீசார் அழைத்து சென்றனர். பின்னர் கல்பனாவின் தாயார் மல்லிகா, சகோதரர் கார்த்திக் ஆகியோருக்கு சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் தகவல் கொடுத்து வரவழைத்தார். மேலும் கல்பனாவுக்கு அறிவுரைகளை கூறி அவர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே கல்பனாவை காப்பாற்றிய ரெயில்வே போலீஸ்காரர்கள் வடிவேல், சவிதா ஆகியோருக்கு கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபு பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் அவர்களுக்கு பணமுடிப்பு வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.