நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில் நெல் விற்பனை செய்ய எளிய முறை விவசாயிகளுக்கு கலெக்டர் வேண்டுகோள்

நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் விற்பனை செய்ய எளிய முறை வழங்கப்பட்டு உள்ளதாகவும், விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில் நெல் விற்பனை செய்ய எளிய முறை விவசாயிகளுக்கு கலெக்டர் வேண்டுகோள்
Published on

கடலூர்,

தமிழகத்தில் நெல் பயிரிடும் விவசாயிகள் பயனடையும் வகையில் உரிய வழிகாட்டுதல்படி மாவட்ட கலெக்டரிடம் அனுமதி பெற்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தினால் அந்தந்த மாவட்டங்களில் மத்திய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, நெல் கொள்முதல் பணிகள் நடைபெற்று வருகிறது.

விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் எளிதில் பதிவு செய்து கொண்டு நெல் விற்பனை செய்ய ஏதுவாக, ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள e.DPC இணைய தளத்தில் வருகிற கொள்முதல் பருவம் 2022-ல் விவசாயிகள் தங்களது பெயர், ஆதார் எண். புல எண். வங்கிக்கணக்கு எண் உள்ளிட்ட விவரங்களை எளிய முறையில் www.tncsc.tngov.in மற்றும் www.tncsc-edpc.in ஆகிய இணையதளத்தில் பதிவேற்றம் செய்து கொள்முதல் செய்ய வேண்டிய தேதியை முன்பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

விற்பனை

மேலும், மேற்கண்ட இணையதளத்தில் வருகிற சம்பா பருவம் 2022-க்கு இணைய வழி பதிவு முறையின் (ஆன்லைன்) மூலம் பதிவு செய்து விவசாயிகள் தாங்கள் இருக்கும் கிராமங்களின் அருகில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை தாங்களே தேர்வு செய்து நெல் கொள்முதலுக்கு தேவையான வருவாய் ஆவணங்களை (பட்டா, சிட்டா மற்றும் அடங்கல்) இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அவ்வாறு பதிவு செய்யப்பட்ட விவசாயிகளின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தின் பெயர், நெல் விற்பனை செய்யப்படும் நாள் மற்றும் நேரம் ஆகிய விவரங்கள் அனுப்பப்படும்.

விவசாயிகள் தங்களது செல்போன் எண்ணில் பெறப்பட்ட குறுஞ்செய்தியின் அடிப்படையில் நீண்ட நேரம் காத்திருக்காமல் குறித்த காலத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தாங்கள் விளைவித்த நெல்லை விற்பனை செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இணைய வழி பதிவு

இந்த இணையவழி பதிவு திட்டத்திற்கு அனைத்து விவசாயிகளும் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் கூடுதல் விவரங்களுக்கு மண்டல மேலாளர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்,

கடலூர் தொலைபேசி எண் 04142-230630 மற்றும் துணை மேலாளர் (கொள்முதல் மற்றும் இயக்கம்) அலகு அலுவலகம் சிதம்பரம், செல்போன் எண்.7010955313-யை தொடர்பு கொள்ள வேண்டும். மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com