

மும்பை,
மும்பையை சேர்ந்தவர் மனோஜ்(வயது45). காங்கிரஸ் தொண்டர். இவர் சமீபத்தில் பேஸ்புக்கில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவான பதிவு ஒன்றை பகிர்ந்து உள்ளார். இது தொடர்பாக மனோஜூக்கும் காட்கோபரை சேர்ந்த பா.ஜனதா ஆதரவாளர் சுரஜ் சிங் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த தகராறு தொடர்பாக இருதரப்பினரும் போலீசில் புகார் அளித்து உள்ளனர்.
இந்தநிலையில் மனோஜ் நேற்று அதிகாலை 1.30 மணியளவில் அசல்பா மெட்ரோ ரெயில் நிலையம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த எதிர்தரப்பினரின் மோட்டார் சைக்கிள் மீது மனோஜின் மோட்டார் சைக்கிள் மோதியதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில், ஆத்திரமடைந்த அந்த கும்பல் மனோஜை வாளால் சரமாரியாக வெட்டி உள்ளனர். இதில் படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக ராஜவாடி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மனோஜை கொலை செய்த கும்பலை வலைவீசி தேடிவருகின்றனர்.