மாவட்டத்தில், வெவ்வேறு சம்பவங்களில் விவசாயி உள்பட 3 பேர் தற்கொலை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங் களில் விவசாயி உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
மாவட்டத்தில், வெவ்வேறு சம்பவங்களில் விவசாயி உள்பட 3 பேர் தற்கொலை
Published on

ராயக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உள்ள சஜ்ஜலப்பட்டியை சேர்ந்தவர் சங்கர் (வயது 37). விவசாயி. இவருடைய மனைவி சரஸ்வதி. இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். சங்கருக்கு கடன் பிரச்சினை இருந்து வந்தது. இதனால் அவர் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் சங்கர் விஷம் குடித்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சங்கர் உயிரிழந்தார். இது குறித்து ராயக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

ஓசூர் சாந்தி நகரை சேர்ந்தவர் தஸ்விஜா ஜீனாபு (18). இவர் தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

இவரது தாய் கடந்த 6 மாதத்திற்கு முன்பு இறந்து விட்டார். இதன் காரணமாக கல்லூரி செல்லாமல் இருந்து வந்த தஸ்விஜா மன வருத்தத்தில் காணப்பட்டார்.

இந்த நிலையில் அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஓசூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணேஷ்பாபு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் பாரமந்தாவை சேர்ந்தவர் முருகேஷ் (21). பேக்கரி கடை ஒன்றில் மாஸ்டராக வேலை செய்து வந்தார். அவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதன் காரணமாக அவருக்கும், குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் மனமுடைந்த முருகேஷ் வேப்பனப்பள்ளி அருகே சிகரலப்பள்ளியில் உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வேப்பனப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாவதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com