

தா.பழூர்:
இ-பதிவு முறை
அவசர தேவைக்காக மாவட்டம் விட்டு மாவட்டம் மற்றும் மாவட்டத்திற்குள் செல்ல அனுமதிப்பதற்கான இ-பதிவு முறை நேற்று முதல் நடைமுறைக்கு வந்தது. இதைத்தொடர்ந்து அரியலூர் மாவட்டத்தையும், தஞ்சை மாவட்டத்தையும் இணைக்கும் தா.பழூர் அருகே உள்ள மதனத்தூர் சோதனைச்சாவடியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது தஞ்சை பகுதியில் இருந்து அரியலூர் மாவட்டத்திற்கு வந்த வாகனங்களையும், அரியலூர் மாவட்டத்தில் இருந்து தஞ்சை மாவட்டம் வழியாக பயணித்த வாகனங்களையும் போலீசார் நிறுத்தி, அதில் இருந்தவர்களிடம் இ-பதிவு சான்று உள்ளதா என்று விசாரித்தனர். இ-பதிவு சான்று வைத்திருந்தவர்களை தொடர்ந்து செல்ல அனுமதித்தனர்.
கடந்த ஆண்டு கொரோனா பரவல் காலத்தில் நடைமுறையில் இருந்த இ-பதிவு பெறும் முறையை விட தற்போது இ-பதிவு செய்வது மிகவும் எளிதாக இருப்பதால், இ-பதிவு பெற்ற அதிக வாகனங்கள் மதனத்தூர் போலீஸ் சோதனைச்சாவடியை கடந்து சென்றதை காண முடிந்தது. மேலும் நேற்று முகூர்த்த நாள் என்பதால் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சோதனைச் சாவடியை கடந்து இருபுறமும் பயணித்தன. இ-பதிவு நடைமுறையை இன்னும் கடுமையாக்கினால் மட்டுமே வாகனங்களின் எண்ணிக்கை குறையும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர். மேலும் தா.பழூர் சுற்றுவட்டார பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் இருந்த போதிலும் காரணம் இல்லாமல் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களின் எண்ணிக்கை கட்டுக்குள் அடங்காமல் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
மீன்சுருட்டி
இதேபோல் நேற்று அரியலூர் மாவட்ட எல்லையும், கடலூர் மாவட்ட எல்லையும் சந்திக்கும் காடுவெட்டி கிராமத்தில் மீன்சுருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு அந்த வழியாக வந்த வாகனங்களை நிறுத்தி, இ-பதிவு பெறப்பட்டுள்ளதா என்று சோதனை செய்தனர். அப்போது புதுச்சேரியில் இருந்து தஞ்சை நோக்கி வந்த கார் உள்பட இ-பதிவு சான்று பெறப்பட்ட வாகனங்களை மட்டுமே அந்த வழியாக செல்ல அனுமதித்தனர்.