திருவண்ணாமலையில், கிராம நிர்வாக அலுவலர் மீது திராவகம் வீசிய போலீஸ்காரர், மாமியார் கைது

திருவண்ணாமலையில் கிராமநிர்வாக அலுவலர் மீது திராவகம் வீசிய போலீஸ்காரர், மாமியாரை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலையில், கிராம நிர்வாக அலுவலர் மீது திராவகம் வீசிய போலீஸ்காரர், மாமியார் கைது
Published on

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை தென்றல் நகரைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவர் கிளிப்பட்டு கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சசிகலா. திருவண்ணாமலை உண்ணாமலையம்மன் நகரை சேர்ந்தவர் விமலா. வெறையூர் வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவரது மகள் ஞானசுந்தரியை கியூ பிராஞ்சில் போலீஸ்காரராக பணியாற்றும் ஸ்ரீபாலுக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் வேலை நிமித்தமாக விமலாவை வீட்டில் கொண்டு வந்து விடுவதும், பின்னர் மோட்டார் சைக்கிளில் அலுவலகத்துக்கு அழைத்து செல்வதற்காகவும் சிவக்குமார் அடிக்கடி விமலாவின் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். அப்போது சிவக்குமாருக்கும், ஞானசுந்தரிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் சிவக்குமாருக்கும், ஞானசுந்தரியின் கணவர் ஸ்ரீபாலுக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு உள்ளது.

கடந்த நவம்பர் மாதம் 29-ந் தேதி சிவக்குமார் குடிபோதையில் விமலாவின் வீட்டிற்கு சென்று தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அன்று இரவு 11 மணியளவில் ஸ்ரீபாலும், அவரது மாமியார் விமலாவும் சிவக்குமார் வீட்டிற்கு சென்று தட்டி கேட்டு உள்ளனர். அப்போது ஸ்ரீபால் மறைத்து வைத்திருந்த திராவகத்தை (ஆசிட்) சிவக்குமார் முகத்தில் வீசியுள்ளார். இதில் சிவக்குமாருக்கு முகம் மற்றும் மார்பில் காயம் ஏற்பட்டது. மேலும் சிவக்குமார் தடுத்தபோது ஸ்ரீபால் மீதும் திராவகம் பட்டு காயம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து சிவக்குமார் மனைவி சசிகலா கொடுத்த புகாரின் பேரில் திருவண்ணாமலை கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் ஸ்ரீபாலும், அவரது மாமியாரும் திருவண்ணாமலை நீதிமன்றத்தில் ஆஜராகினர். பின்னர் அவர்களை போலீசார் கைது செய்தனர். இதில் ஸ்ரீபால் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் சென்னையில் உள்ள மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com