

காரைக்கால்,
காரைக்கால் மாவட்டத்தில் காரைக்கால்மேடு, கிளிஞ்சல் மேடு, மண்டபத்தூர், கருக்களாச்சேரி, பட்டினச்சேரி உள்ளிட்ட 11 மீனவ கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் 1000-க்கும் மேற்பட்ட பைபர் படகுகளும், 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும் இயங்கி வருகின்றன. மீன்பிடி தொழிலை நம்பி 12 ஆயிரம் மீனவர்கள் உள்ளனர்.
காரைக்கால் அரசலாற்றகரையையொட்டி மீன்பிடி துறைமுகம் உள்ளது. ஆனால் இங்கு மீன் ஏலக்கூடம், கருவாடு காயவைக்கும் தளம், ஐஸ் கூடம், மீன் பதப்படுத்தும் கூடம், வலைபின்னும் கூடம் மற்றும் கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை.
இதனால் மீனவர்கள் வலை பின்னுவதற்கும், மீன்களை ஐஸ் பெட்டிகளில் பதப்படுத்துவதற்கும் வேறு இடத்திற்கு செல்ல வேண்டி உள்ளது. துறைமுகத்தின் உள்ளே கருவாடு காயவைக்கவும், காயவைத்த கருவாடுகளை பத்திரப்படுத்தவும் போதிய இட வசதிகள் இல்லாததால், மீனவர்கள் தங்கள் வசிக்கும் கிராம சாலைகளிலும், மண் திடல்களிலும் மீனை காயவைத்து கருவாடுகளாக உருவாக்குகின்றனர்.
தற்போது கோடைக்காலம் என்பதால் வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளதால் மீனவர்கள் சிறு பந்தல், கீற்று கொட்டகை அமைத்து மீன்களை காயவைத்து கருவாடுகளாக மாற்றுகின்றனர். இதில் பல்வேறு இடர்பாடுகள் உள்ளதால் காரைக்கால் மாவட்ட 11 மீனவ கிராமங்களிலும் கருவாடு காயவைக்கும் தளம் அமைத்தல், அனைத்து கிராம சாலைகள், உற்புற சாலைகள், மின்விளக்கு வசதிகள் போன்றவை செய்து தரவேண்டும் என்று மீனவர்கள் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து மீன்வளத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், தமிழகத்தில் சோலார் பேனல் திட்ட முறையில், கருவாடு காய வைக்கப்படுகிறது. இதற்காக ஒரு அமைப்புக்கு ரூ.7 லட்சம் செலவாகிறது. புதுச்சேரி அரசு உதவியுடன் ஐதராபாத்தில் உள்ள தேசிய மீன் வளர்ச்சி வாரியம் சார்பில், காரைக்காலில் ஒரு சோலார் பேனலை அமைக்க அனுமதி கோரியுள்ளோம். அண்மையில், காரைக்காலில் உள்ள என்.ஐ.டி. நிறுவனம் இந்த முறையில் சிறு சோதனை செய்து காண்பித்தனர். அதை அரசே செய்தால் நன்றாக இருக்குமா? என ஆய்வு செய்து வருகிறோம். மீனவர்களின் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார்.