கச்சிராயப்பாளையம் அருகே பரிதாபம்: ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவன் சாவு

கச்சிராயப்பாளையம் அருகே ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
கச்சிராயப்பாளையம் அருகே பரிதாபம்: ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவன் சாவு
Published on

கச்சிராயப்பாளையம்,

விழுப்புரம் மாவட்டம் கச்சிராயப்பாளையம் அருகே உள்ள மட்டிகைக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகன் சந்தோஷ்குமார் (வயது 11). இவன் அதே ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை இவன், இயற்கை உபாதை கழிப்பதற்காக அருகில் உள்ள கோமுகி ஆறு பகுதிக்கு செல்வதாக தனது பெற்றோரிடம் கூறி விட்டு சென்றான். பின்னர் வெகுநேரம் ஆகியும் அவன் வீடு திரும்ப வில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவனது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கோமுகி ஆறு பகுதிக்கு சென்று தேடி பார்த்தனர். ஆனால் சந்தோஷ்குமார் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் நேற்று காலை தாகப்பாடி அம்மன் கோவில் அருகில் உள்ள கோமுகி ஆற்றில் சந்தோஷ்குமார் பிணமாக மிதந்தான். இதுபற்றி தகவல் அறிந்த கச்சிராயப்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, ஆற்றில் பிணமாக மிதந்த சந்தோஷ்குமாரின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில், அவன் கை, கால்களை கழுவுவதற்காக ஆற்றில் இறங்கியபோது, தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி பலியாகி இருப்பது தெரியவந்தது. இதனிடையே தகவல் அறிந்து வந்த கிருஷ்ணன் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சந்தோஷ்குமாரின் உடலை பார்த்து கதறி அழுதனர். இதையடுத்து போலீசார், சந்தோஷ்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com