

செம்பட்டி,
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூரில் காமராஜர் அணை உள்ளது. மேற்குதொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள இந்த அணை 24 அடி உயரம் கொண்டதாகும். இந்த அணையில் இருந்து திண்டுக்கல் மாநகராட்சி, சின்னாளபட்டி, சித்தையன்கோட்டை பேரூராட்சிகள் மற்றும் 20-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
ஆடலூர், பன்றிமலை, பண்ணைக்காடு, கூழையாறு, புல்லாவெளி மலைப்பகுதிகளில் பெய்யும் மழைநீர் ஓடைகள் வழியாக ஆத்தூர் காமராஜர் அணைக்கு வந்து சேரும். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக சரியாக மழை பெய்யவில்லை. இதனால் அணையில் நீர்மட்டம் படிப்படியாக குறைந்தது. இதன்காரணமாக அணை குட்டைபோல் காட்சியளிக்கிறது.
இதையடுத்து அணைப்பகுதியில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு தண்ணீர் எடுக்கப்பட்டு திண்டுக்கல் மாநகராட்சிக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனால், அணையில் விடப்பட்ட மீன்கள் தண்ணீர் குறைந்ததால் செத்து மிதக்கின்றன.
நேற்று ஒரே நாளில் ஏராளமான மீன்கள் அணையில் செத்து மிதக்கின்றன. இதனால் மீன் ஏலத்தாரர்கள், வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.
மேலும் அணையை சுற்றி துர்நாற்றம் வீசி வருகிறது. உயிருடன் இருக்கிற மீன்களை காப்பாற்ற தினசரி 60 டிராக்டர் தண்ணீர் அணையில் விட்டு வருகின்றனர். கடந்த 3 நாட்களாக 180 டிராக்டர் தண்ணீரை விட்டு உயிருடன் இருக்கும் மீன்களை பிடித்து வருகின்றனர். வெயிலின் தாக்கம் காரணமாக தொடர்ந்து மீன்கள் செத்து வருகின்றன.
இதுகுறித்து மீன்கள் பிடிப்பவர்கள் கூறுகையில், திண்டுக்கல் மாநகராட்சி நிர்வாகத்திடம் இருந்து ஆத்தூர் காமராஜர் அணையில் மீன் பிடிக்க ஆண்டுக்கு ரூ.27 லட்சத்துக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. இங்கு ரோகு, கட்லா, சில்வர்கெண்டை, ஜிலேபி, மிருகால், விரால் மீன் குஞ்சுகள் விடப்பட்டு வளர்க்கப்பட்டு வருகின்றன. அணையின் நீர்மட்டம் குறைந்து கொண்டே வந்ததால், மீன்களின் இனப்பெருக்கம் குறைந்து வந்தது. தற்போது அணையில் வெகுவாக நீர்மட்டம் குறைந்ததால் மீன்கள் செத்து வருகின்றன. நேற்று ஒரே நாளில் மட்டும் சுமார் 10 டன் அளவுக்கு மீன்கள் செத்து மிதக்கின்றன என்றனர். இதற்கிடையே அணையின் தண்ணீர் மீன் வாடையுடன் இருப்பதால், கடந்த 2 நாட்களாக திண்டுக்கல் மாநகராட்சிக்கு குடிநீர் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.