ஓசூர் அருகே யானையை சுட்டுக்கொன்ற வழக்கு: மேலும் 2 விவசாயிகள் கைது

ஓசூர் அருகே யானையை சுட்டுக்கொன்ற வழக்கில் மேலும் 2 விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஓசூர் அருகே யானையை சுட்டுக்கொன்ற வழக்கு: மேலும் 2 விவசாயிகள் கைது
Published on

காட்டு யானை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தளியை அடுத்த ஜவளகிரி வனப்பகுதியையொட்டி உள்ள உளிபண்டா கிராமத்தில் சின்னபையன் (வயது 45) என்பவர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு சின்னபையன் தனது நிலத்தில் காவல் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது உளிபண்டா காட்டில் இருந்து 4 காட்டு யானைகள், சின்னபையனின் விவசாய நிலத்திற்கு அருகில் வந்தன. அங்குள்ள ராகி, அவரை, தக்காளி உள்ளிட்ட பயிர்களை நாசம் செய்த யானைகள் சின்னபையனின் விவசாய நிலத்துக்குள் புகுந்தன. அப்போது அந்த பகுதியில் இருந்த சிலர், தாங்கள் வைத்திருந்த நாட்டுத்துப்பாக்கியால் யானைகளை நோக்கி சுட்டனர். இதில் 25 வயது மதிக்கத்தக்க பெண் யானையின் நெற்றியில் 2 குண்டுகள் பாய்ந்தன. இதனால் யானை மூளை சிதறி அந்த இடத்திலேயே இறந்தது.

மேலும் 2 பேர் கைது

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக தர்மபுரி மண்டல வன பாதுகாவலர் ஆசீஸ்குமார் ஸ்ரீ வத்சவா, கிருஷ்ணகிரி மாவட்ட வன அலுவலர் ராஜேந்திரன், ஜவளகிரி வனச்சரகர் (பொறுப்பு) சுகுமார், வனவர்கள் முனிராஜ், கதிரவன் மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தினார்கள். தொடர்ந்து யானையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, அங்கேயே குழி தோண்டி புதைக்கப்பட்டது. இது தொடர்பாக வனத்துறையினரும், தளி போலீசாரும் விசாரணை நடத்தினார்கள்.

அதில் உளிபண்டா பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் மாதேஸ் (46), ராமமூர்த்தி (44) மற்றும் சிலர் சேர்ந்து யானையை சுட்டுக் கொன்றது தெரியவந்தது. இதையடுத்து மாதேஸ், ராமமூர்த்தி ஆகிய 2 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு நாட்டுத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நிலையில் அவர்களிடம் வனத்துறையினர் நடத்திய விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் சென்னீரான் என்கிற சென்ன வீரன் (46), பசவராஜ் (45) ஆகியோருக்கு இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சென்னீரான், பசவராஜ் ஆகிய 2 பேரையும் வனத்துறையினர் நேற்று கைது செய்தனர்.

வெடிமருந்துகள் பறிமுதல்

அவர்களிடம் இருந்து மேலும் ஒரு நாட்டுத்துப்பாக்கி மற்றும் துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் குண்டு, வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட 4 பேரிடம் இருந்தும், மொத்தம் 2 அனுமதி பெறாத நாட்டுத்துப்பாக்கிகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள், தளி போலீசில் ஒப்படைக்கப்பட்டனர். போலீசார் அவர்களை கைது செய்து, தேன்கனிக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-

துப்பாக்கிகள் மறைப்பு

தேன்கனிக்கோட்டை, சானமாவு, ஜவளகிரி வனப்பகுதியில் யானைகள் உள்ளன. இதை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அதையும் மீறி சில நேரங்களில் இதுபோன்ற அசம்பாவித சம்பவங்கள் நடந்து வருகின்றன. தேன்கனிக்கோட்டை மலை கிராமங்களில் அனுமதி பெறாமல் நாட்டுத்துப்பாக்கிகள் வைத்திருக்கக்கூடாது என்று நாங்கள் அறிவுறுத்தியதின் பேரில் சிலர் தாமாக முன் வந்து நாட்டுத்துப்பாக்கிகளை ஒப்படைத்தனர்.

ஆனாலும் சிலர் வீடுகளில் வைக்கோல் போருக்குள்ளும், வனப்பகுதிக்குள்ளும் துப்பாக்கி, வெடிமருந்து, துப்பாக்கி குண்டுகளை மறைத்து வைத்துள்ளனர். சேதமடைந்த பயிர்களுக்கு வனத்துறை சார்பில் உரிய இழப்பீடு வழங்கி வருகிறோம். இருந்த போதிலும் தற்போது நடந்துள்ள சம்பவம் துரதிர்ஷ்டவசமானது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com