சம்பள தொகை கொடுக்காததால் வடக்கு ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பணியாளர்கள்

சம்பள தொகை கொடுக்காததால் வடக்கு ஒன்றிய அலுவலகத்தை பணியாளர்கள் முற்றுகையிட்டனர். இதனால் டெங்கு ஒழிப்புபணி முடங்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
சம்பள தொகை கொடுக்காததால் வடக்கு ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பணியாளர்கள்
Published on

பொள்ளாச்சி,

தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் டெங்கு கொசு உற்பத்தியை கட்டுப்படுத்த மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் கொசு ஒழிப்பு பணியாளர்கள் பணி அமர்த்தப்பட்டனர். பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில் உள்ள 39 ஊராட்சிகளில் தேசிய ஊரக உறுதி திட்டத்தில் பணிபுரியும் சுமார் 400 பேர் கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டனர்.

ஆனால் அவர்களுக்கு கடந்த 3 மாதமாக சம்பளம் கொடுக்கவில்லை என்று தெரிகிறது. இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் கேட்டும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த கொசு ஒழிப்பு பணியாளர்கள் வடக்கு ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

முற்றுகையில் ஈடுபட்ட பணியாளர்களை அலுவலக கூட்டரங்கிற்கு அழைத்து வட்டார வளர்ச்சி அலுவலர் விவேகானந்தன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், பணியாளர்களுக்கு தினக்கூலியாக ரூ.185 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் சுகாதார துறையில் இருந்து கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கு கொடுக்க வேண்டிய சம்பள பணம் இன்னும் வரவில்லை. இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர், ஊராட்சிகள் மூலம் சம்பள பணம் கொடுக்க வேண்டும் என்று தகவல் அனுப்பி உள்ளார் என்றார்.

அப்போது பணியாளர்கள் பெரும்பாலான ஊராட்சிகளில் பணம் இல்லை என்று கூறுகின்றனர். எத்தனை நாளுக்குள் சம்பள பணம் வரும் என்று கேட்டனர். அதற்கு அவர், பணம் இருக்கிற ஊராட்சிகளில் இன்னும் 2 நாட்களில் பணம் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். மற்ற ஊராட்சிகளில் சம்பளம் கொடுக்க மாற்று ஏற்பாடு செய்யப்படும் என்றார். ஆனால் பணியாளர்கள் சம்பள பணம் வரும் வரை கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட மாட்டோம் என்று கூறிவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர்.

கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொண்டு வரும் நிலையில் டெங்கு காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டு ஒரு மாதத்தில் பொள்ளாச்சி தாலுகாவில் 3 பேர் இறந்து விட்டனர். தற்போது வடக்கு ஒன்றியத்தில் சம்பள பிரச்சினை காரணமாக பணியாளர்கள் பணிக்கு செல்லவில்லை என்றால், கொசு உற்பத்தி மேலும் அதிகரிக்கும்.

இதன் காரணமாக டெங்கு கொசு ஒழிப்பு பணி முடங்கும் ஆபத்து ஏற்பட்டு உள்ளது. இதனால் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்கும். மேலும் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் இருப்பதால் மத்திய அரசிடம் இருந்து வரும் நிதி கிடைப்பதில்லை.

இதனால் பெரும்பாலான ஊராட்சிகளில் நிதி பற்றாக்குறை உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் பணியாளர்களுக்கு சம்பள பணத்தை உடனடியாக வழங்க நடவடிக்கை வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.இதுகுறித்து கொசு ஒழிப்பு பணியாளர்கள் கூறிய தாவது:-

தேசிய ஊரக உறுதி திட்டத்தில் பணிபுரிந்து வந்த எங்களை கடந்த ஆகஸ்டு மாதம் 2-ந்தேதி முதல் டெங்கு கொசு ஒழிப்பு பணியில் அமர்த்தினார்கள். காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை வீடு, வீடாக சென்று கொசு ஒழிப்பு பணியை செய்து வருகிறோம்.

தொட்டிகளில் மருந்து ஊற்றுதல், தொட்டிகளை கழுவி சுத்தம் செய்தல், தேவையற்ற இடங்களில் தேங்கி நிற்கும் நீரை அப்புறப்படுத்துதல் உள்பட பல்வேறு பணிகளை செய்து வருகிறோம்.

கிருமி நாசினி மருந்து (பிளச்சிங் பவுடர்) கொண்டு தொடர்ந்து சுத்தம் செய்யும் போது, கைகளில் புண்கள் ஏற்படுகிறது. மேலும் ஒரு சில வீடுகளுக்கு செல்லும் போது, அவர்கள் பேசும் தகாத வார்த்தைகளை கேட்டுக் கொண்டு சுகாதார பணிகளை மேற்கொண்டு வருகிறோம். ஆனால் வேலை செய்தற்கு சம்பளம் கொடுக்காமல் இழுத்தடித்து வருகின்றனர்.

தீபாவளி பண்டிகைக்கு முன்பாக சம்பளம் போடப்படும் என்றனர். ஆனால் தீபாவளி முடிந்து ஒரு வாரம் ஆகி விட்டது.

இன்னும் சம்பளம் வழங்கவில்லை. இதனால் குடும்பத்தை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.

மேலும் கடன் வாங்கித்தான் எங்களின் குடும்ப செலவுகளை செய்து வருகிறோம். மிகுந்த நெருக்கடியில் உள்ளோம்.

ஆகவே சம்பள பணம் வழங்கும் வரை டெங்கு கொசு ஒழிப்பு பணிக்கு செல்ல மாட்டோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com