கோவை அருகே வாழைத்தோட்டத்துக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம்

கோவை அருகே வாழைத்தோட்டத்துக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம் செய்தன. மேலும் காயத்துடன் சுற்றித்திரியும் குட்டி யானைக்கு சிகிச்சை அளிக்க கோரிக்கை எழுந்துள்ளது.
கோவை அருகே வாழைத்தோட்டத்துக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம்
Published on

கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. தற்போது வனப்பகுதியில் நிலவும் வறட்சி காரணமாக காட்டுயானைகள், காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் மலையடிவார பகுதியில் உள்ள விளைநிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.

இந்த நிலையில் நேற்று கோவையை அடுத்த சின்னதடாகம் அருகே பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள பாபு என்பவருக்கு சொந்தமான வாழைத்தோட்டத்தில் குட்டியுடன் ஒரு காட்டுயானை புகுந்தது. அந்த காட்டு யானைகள் வாழைமரங்களை முறித்து தின்றும், சேதப்படுத்தியும் அட்டகாசம் செய்தன. இதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் பட்டாசு வெடித்து விரட்டியடித்தனர். விரட்டப்பட்ட அந்த யானை, குட்டியுடன் பன்னிமடையில் உள்ள சங்கனூர் பள்ளம் வழியாக வனப்பகுதிக்குள் சென்றன.

இதே போல ஆனைக்கட்டி அருகே பெரியதடாகம் பகுதியில் கடந்த சில நாட்களாக வாயில் காயத்துடன் ஒரு குட்டியானை சுற்றித்திரிந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை ஆனைக்கட்டி தடாகம் ரோட்டில் பெரியதடாகம் பிரிவில் வனப்பகுதியில் இருந்து வந்த அந்த குட்டியானை அங்கும் இங்குமாக ஓடியபடி அலைந்து திரிந்தது. இதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் பீதி அடைந்தனர். உடனே வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சிறிது நேரத்திற்கு பின்னர், அந்த குட்டியானை வனப்பகுதிக்குள் சென்றது. வனப்பகுதிக்குள் சென்ற குட்டியானையை தேடி, சிகிச்சை அளிக்க வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும்போது, கடந்த ஒரு வாரமாக வனப்பகுதியில் இருந்து குட்டியானை ஒன்று அடிக்கடி ஊருக்குள் புகுந்து வந்தது. விவசாய நிலத்தில் வைத்திருந்த வெடி(அவுட்காய்) வெடித்து இந்த குட்டியானைக்கு வாயில் காயம் ஏற்பட்டுள்ளது. வாயில் காயம் ஏற்பட்டு இருப்பதால் இரை உண்ண முடியாமல் அவதிப்பட்டு வருகிறது. அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்பாக வனத்துறையினர், அந்த குட்டியானையை மீட்டு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். என்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com