வேளாண்மை கருவிகள், இடு பொருட்களுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்

வேளாண்மை கருவிகள், விவசாய இடுபொருட்களுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கோவையில் நடைபெற்ற விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வேளாண்மை கருவிகள், இடு பொருட்களுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்
Published on

கோவை,

விவசாயிகள் உரிமைக்காக நடைபெற்ற போராட்டத்தின்போது போலீஸ் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கோவையில் உழவர் தின பேரணியும், பொதுக் கூட்டமும் நடைபெற்றது. பீளமேட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி அருகில் தொடங்கிய பேரணியை விவசாயிகள் சங்க கோவை மாவட்டத் தலைவர்கள் தெய்வசிகாமணி, ஆர்.கணேசன் ஆகியோர் தொடங்கிவைத்தனர். கொடிசியா திறந்த வெளித்திடலில் பேரணி நிறைவடைந்தது. இதில் விவசாயிகள் ஏர்கலப் பையை எந்திய படி வந்தனர். பின்னர் அங்கு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில், சேலம் மாவட்டத் தலைவர் மாணிக் கம் கொடியேற்றிவைத்தார். போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் இறந்த 27 பேர் மற்றும் வறட்சியால் தற்கொலை செய்துகொண்ட 217 விவசாயிகளுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

கூட்டத்துக்கு, மாநிலச் செயலாளர் எம்.செந்தில் குமார் வரவேற்றார். மாநிலத் தலைவர் வழுக்குப்பாறை பாலு, பொதுச் செயலாளர் பி.கந்தசாமி தலைமை தாங்கினார்கள். பொருளாளர் ஏ.சண்முகம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி எம்.கற்பகவிநாயகம் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார்.

விவசாயிகள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-

தடையாணை பெற்றதற்கு கண்டனம்

தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட, அனைத்து விவசாய கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் தடையாணை பெற்ற தமிழக அரசுக்கு இந்த கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்படுகிறது.

நாட்டில் உள்ள அனைத்து நதிகளையும் தேசியமயமாக்கி, நதிநீர் இணைப்பை துரிதப்படுத்த வேண்டும். தனிப்பட்ட பயிர் இழப்பீடுக்கும் நஷ்டஈடு வழங்கும் வகையில், பேரிடர் மேலாண்மை சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும்.

விதை, பூச்சி மருந்துகள் சட்டத்தை முறையாக அமல்படுத்த வேண்டும். குறைபாடான விதைகள், பூச்சி மருந்துகளால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கும் இழப்பீடு வழங்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ள வேண்டும். பயிர் காப்பீடு திட்டத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆதரவான நிலை இல்லாமல் காப்பீட்டு நிறுவனங்களுக்கு சாதகமாக உள்ளது. எனவே மற்ற காப்பீடுகளை போல பயிர் காப்பீட்டுக்கும் பாலிசிதாரர்களுக்கு உரிய நிவாரணம் கிடைத்திட சட்டம் திருத்தப்பட வேண்டும்.


வேளாண்மை கருவிகள், இடு பொருட்களுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும். மத்திய, மாநில அரசுகள் வேளாண்மை விளைபொருட் களுக்கு உரிய விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். விலை நிர்ணயம் செய்யும்வரை அரசு மானியங்களையோ, கடன் தள்ளுபடி திட்டங்களையோ ரத்து செய்யக்கூடாது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

X

Daily Thanthi
www.dailythanthi.com