போலி ‘கிரெடிட்’, ‘டெபிட்’ கார்டுகள் தயாரித்து நூதன முறையில் மோசடி

போலியாக ‘கிரெடிட்‘ மற்றும் ‘டெபிட்‘ கார்டுகளை தயாரித்து நூதன முறையில் மோசடியில் ஈடுபட்ட இலங்கையை சேர்ந்தவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
போலி ‘கிரெடிட்’, ‘டெபிட்’ கார்டுகள் தயாரித்து நூதன முறையில் மோசடி
Published on

பெங்களூரு,

பெங்களூருவில், போலியாக கிரெடிட், டெபிட் கார்டுகள் தயாரித்து நூதன முறையில் மோசடி செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் நேற்று மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்தது.

இந்த பொருட்களை போலீஸ் கமிஷனர் பிரவீன் சூட், மத்திய குற்றப்பிரிவு போலீஸ் கூடுதல் போலீஸ் கமிஷனர் ரவி ஆகியோர் பார்வையிட்டனர். இதுகுறித்து, பிரவீன் சூட் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

பெங்களூரு தொட்டகலசந்திராவில் சக்ரபாணி என்பவர் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவருடைய கடைக்கு கடந்த 21ந் தேதி 2 மர்மநபர்கள் சென்று 3 எல்.இ.டி. தொலைக்காட்சி வாங்கினர். இதற்கான ரூ.1.10 லட்சத்தை அவர்கள் கிரெடிட் கார்டு மூலம் வழங்கிவிட்டு சென்றுவிட்டனர். இருப்பினும், சக்ரபாணியின் வங்கி கணக்கில் பணம் ஏறவில்லை.

இதுகுறித்து, அவர் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில், 3 எல்.இ.டி. தொலைக்காட்சிகள் வாங்கிவிட்டு மோசடி செய்த 2 பேர் உள்பட 3 பேரை ரகசிய தகவலின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். ஜாலஹள்ளியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு தங்கியிருந்த அவர்கள் போலீசாரிடம் சிக்கினர்.

விசாரணையில், அவர்கள் இலங்கை நாட்டின் ஜாப்னா பகுதியை சேர்ந்த திவ்யன் (வயது 30), பெங்களூரு கனகநகரில் வசித்து வரும் நவாஜ் ஷெரீப் (22), எச்.பி.ஆர். லேஅவுட்டில் வசித்து வரும் நதீம் ஷெரீப் (30) என்பது தெரியவந்தது. இதில், முக்கிய குற்றவாளியான திவ்யன் சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்து சென்னையில் வாழ்ந்து வந்ததும், கடந்த 3 ஆண்டுகளாக அவர் நவாஜ் ஷெரீப், நதீம் ஷெரீப் ஆகியோருடன் பெங்களூருவில் தங்கியது தெரியவந்தது.

மேலும், அவர்கள் இணையதளத்தில் வெளிநாடுகளில் வசித்து வருபவர்களின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளின் விவரங்களை பெற்று அதன் அடிப்படையில் போலியாக கிரெடிட், டெபிட் கார்டுகள் தயாரித்து நூதன முறையில் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இவ்வாறு தயாரிக்கும் கிரெடிட், டெபிட் கார்டுகளை இடைத்தரகர்கள் மூலம் வெளிமாநிலங்களில் வசித்து வரும் கடைக்காரர்கள் வைத்திருக்கும் ஸ்வைப்பிங் மெஷின்களில் பயன்படுத்தி பணத்தை மோசடி செய்துள்ளனர்.

இவர்களிடம் இருந்து 144 போலி கிரெடிட் கார்டுகள், 36 ஸ்வைப்பிங் மெஷின், 16 ஓட்டுனர் உரிமங்கள் மற்றும் போலி கிரெடிட், டெபிட் கார்டுகள் தயாரிக்க பயன்படும் எந்திரங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. கைதான 3 பேர்களின் கூட்டாளிகள் மேலும் சிலர் தலைமறைவாக இருக்கிறார்கள். அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

போலி கிரெடிட், டெபிட் கார்டுகள் தயாரித்து மோசடி செய்ததாக திவ்யன் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் 2 வழக்குகள் பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com