குடும்ப தகராறில் பெண் தீக்குளித்து தற்கொலை காப்பாற்ற முயன்ற கணவரும் உயிரிழந்த சோகம்

குடும்ப தகராறில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். அவரை காப்பாற்ற முயன்ற கணவரும் தீக்காயமடைந்து உயிரிழந்தார்.
குடும்ப தகராறில் பெண் தீக்குளித்து தற்கொலை காப்பாற்ற முயன்ற கணவரும் உயிரிழந்த சோகம்
Published on

கோலார் தங்கவயல்,

குடும்ப தகராறில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். அவரை காப்பாற்ற முயன்ற கணவரும் தீக்காயமடைந்து உயிரிழந்தார்.

இந்த பரிதாப சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:

சிக்பள்ளாப்பூர் மாவட்டம் குடிபண்டே தாலுகா பேச்சகானபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மகேஷ் ஆச்சாரி (வயது 28). இவருடைய மனைவி ரூபா (22). இவர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. மகேஷ் அளவுக்கு அதிகமாக மது அருந்தும் பழக்கத்துக்கு அடிமையாகி இருந்ததாக தெரிகிறது.

இதனால் அவர், தினமும் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். இதனால், கணவன்மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று இரவும் மகேஷ், மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அவரை ரூபா கண்டித்துள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

இதன்காரணமாக மனமுடைந்த ரூபா, வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து தனது உடலில் ஊற்றி தீவைத்து கொண்டார். இதனால் அவருடைய உடலில் தீப்பிடித்து எரிந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மகேஷ், அவரை காப்பாற்ற முயன்றுள்ளார். அப்போது அவருடைய உடலிலும் தீப்பிடித்து எரிந்தது. அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்தனர்.

பின்னர் அவர்கள் 2 பேரின் உடல்களிலும் பிடித்து எரிந்த தீயை அணைத்து, குடிபண்டே அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக பெங்களூரு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே அவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதையடுத்து 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து குடிபண்டே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com