

விழுப்புரம்,
தமிழகத்தில் நெல் பயிரிடும் விவசாயிகள் பயனடையும் வகையில் கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையில் உள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி மாவட்ட நிர்வாகத்திடம் உரிய அனுமதி பெற்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தினால் மாவட்டங்களில் இந்திய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் பணிகள் நடைபெற உள்ளது.
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள், விற்பனைக்கு கொண்டு வரும் நெல் வீணாவதை தவிர்ப்பதற்கும், கொள்முதல் நிலையத்தில் உள்ள பணியாளர்கள் முதுநிலைப்படி நெல் கொள்முதல் செய்யாமல் தங்களுடைய விருப்பத்திற்கு ஏற்ப விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்வதை தடுப்பதற்கும், விவசாயிகளிடம் பாகுபாடு காட்டுவதை தவிர்ப்பதற்கும் நெல் விற்பனையில் இடைத்தரகர்களின் தலையீட்டை முற்றிலும் நீக்குவதற்கும், விவசாயிகளின் நேரம் வீணாவதை தவிர்க்கவும் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள e-PDC இணையதளத்தில் சம்பா கொள்முதல் பருவம் 2022-ல் விவசாயிகள் தங்களது பெயர், ஆதார் எண், புல எண், வங்கி கணக்கு எண் உள்ளிட்ட விவரங்களை www.tncsc.tn.gov.in அல்லது www.tncsc-edpc.in இணையதளத்தில் பதிவு செய்துகொண்டு நெல் விற்பனை செய்ய ஏதுவாக கொள்முதல் செய்ய வேண்டிய தேதியை முன்பதிவு செய்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இணையவழி மூலம் பதிவு செய்யலாம்
மேலும் இணையதளத்தில் எதிர்வரும் சம்பா பருவத்துக்கு விழுப்புரம் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தொடங்கப்படும் நாளிலிருந்து விவசாயிகள் தாங்கள் இருக்கும் கிராமங்களின் அருகில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை தாங்களே தேர்வு செய்து நெல் கொள்முதலுக்கு தேவையான வருவாய் ஆவணங்களை (பட்டா, சிட்டா, அடங்கல்) இணையத்தில் பதிவேற்றம் செய்யலாம். அவ்வாறு பதிவு செய்யப்பட்ட விவசாயிகளின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தின் பெயர், நெல் விற்பனை செய்யப்படும் நாள், நேரம் ஆகிய விவரங்கள் அனுப்பப்படும். விவசாயிகள் தங்களது செல்போன் எண்ணில் பெறப்பட்ட குறுஞ்செய்தியின் அடிப்படையில் நீண்ட நேரம் காத்திருக்காமல் குறித்த காலத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தாங்கள் விளைவித்த நெல் மூட்டைகளை விற்பனை செய்து பயன்பெறலாம்.
இந்த இணையவழி பதிவு திட்டத்திற்கு அனைத்து விவசாயிகளும் ஒத்துழைப்பு அளிக்குமாறும், கூடுதல் விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட முதுநிலை மண்டல மேலாளர், மண்டல மேலாளர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.