செய்துங்கநல்லூர் அருகே விவசாயிகள் சாலைமறியல்

விவசாயிகள் சாலைமறியல்
செய்துங்கநல்லூர் அருகே விவசாயிகள் சாலைமறியல்
Published on

ஸ்ரீவைகுண்டம்:

செய்துங்கநல்லூர் அருகே உள்ளது தூதுகுழி குளம், தாமிரபரணி ஆற்று நீர் மூலம் பாசனம் பெறும் குளம். மருதூர் மேலக்காலில் உள்ள இந்த பாசன குளத்தில் முதல்மடை கீழதூதுகுழி கிராமத்துக்கு அருகில் நெல்லை- திருச்செந்தூர் மெயின்ரோட்டில் உள்ளது. இந்த பாசன மடை கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு முன்பு தூர்ந்து போய்விட்டது. இதை திறக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இதற்கிடையில் கல்லிடைக்குறிச்சியில் இருந்து திருச்செந்தூர் வரை சாலையை அகலப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணியின்போது மடை சீர் செய்யப்படும் என்று பொதுப்பணித் துறையினர் தெரிவித்தனர்.

இந்தநிலையில் நேற்று காலையில் சாலை பணி செய்பவர்கள் மணலை லாரியில் அள்ளி வந்து இந்த மடையை அடைத்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த கீழதூதுகுழி பகுதி விவசாயிகள், மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் நயினார் தலைமையில் சாலைக்கு வந்து எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் விவசாயிகள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். 100-க்கு மேற்பட்ட விவசாயிகளும், பெண்களும் கலந்து கொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீவைகுண்டம் துணை சூப்பிரண்டு வெங்கடேசன், ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் ராதாகிருஷ்ணன், செய்துங்கநல்லூர் வருவாய் ஆய்வாளர் மைதிலி ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்தனர். மறியல் செய்தவர்களை கலைந்து செல்லும்படி வலியுறுத்தினர். மேலும் இவ்விடத்தில் மடை அமைத்து தருவதாக உறுதியளித்தனர். ஆனால் விவசாயிகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் ஒப்பந்தகாரர்களும் வந்து உறுதி அளித்த பிறகே மறியலை கைவிடுவோம் என்று கூற அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மாரியப்பன், ஸ்ரீவைகுண்டம் உதவிபொறியாளர் நவீன்பிரபு, ஒப்பந்தகாரர் சார்பில் மேலாளர் ஆகியோர் வந்து இவ்விடத்தில் மடை உண்டு. நிச்சயம் கட்டி தருவோம் என உறுதி அளித்தனர். அதன்பின்பு மறியல் செய்த விவசாயிகள் கலைந்து சென்றனர்.

இதனால் கடந்த 15 ஆண்டுகளாக பிரச்சினையில் இருந்த தூதுகுழி குளம் முதல் மடை பிரச்சினை முடிவுக்கு வந்தது. இதனால் சுமார் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

.....

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com