

சோமரசம்பேட்டை,
தீக்குளித்து சாவு
திருச்சி சோமரசம்பேட்டை அருகே உள்ள வாசன் வேலி நகரில் வசித்து வருபவர் முத்தையன். வங்கி ஊழியர். இவருக்கு 8 பெண் குழந்தைகள். அவர்களில் கடந்த ஆண்டு ஒரு பெண் இறந்து விட்டதாக கூறப்படுகிறது. இவர்களில் கவிதா(வயது33) என்பவர் என்ஜினீயரிங் முடித்துள்ளார். தனக்கு திருமணம் நடக்க வில்லையே என்ற மன அழுத்தத்தில் கவிதா தவித்து வந்ததாக தெரிகிறது.
இந்நிலையில் நேற்று இரவு அவர் சாப்பிட்டு விட்டு தூங்க சென்றார். வெகு நேரமாகியும் தூக்கம் வராததால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து, வீட்டின் உள்ளே கேனில் வைக்கப்பட்டிருந்த டீசலை எடுத்து தனது உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். ஆடையில் பற்றிய தீ கண்ணிமைக்கும் நேரத்தில் உடல் முழுவதும் பரவியது. தீயின் கொடுமை தாங்காமல் அலறி துடித்தார். அவரது அலறல் சத்தத்தை கேட்டு வீட்டில் இருந்தவர்கள் ஓடி வந்து, கவிதாவை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கவிதா பரிதாபமாக உயிரிழந்தார்.
போலீசார் விசாரணை
தகவல் அறிந்த சோமரசம்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் முருகையன், கவிதா உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.