பரப்பாடி அருகே பெண் மர்ம சாவு : கொலை செய்யப்பட்டதாக கூறி உறவினர்கள் போலீசில் புகார்

பரப்பாடி அருகே பெண் மர்மமான முறையில் இறந்தார். அவர் கொலை செய்யப்பட்டதாக கூறி உறவினர்கள் போலீசில் புகார் அளித்தனர்.
பரப்பாடி அருகே பெண் மர்ம சாவு : கொலை செய்யப்பட்டதாக கூறி உறவினர்கள் போலீசில் புகார்
Published on

இட்டமொழி,

நெல்லை மாவட்டம் பரப்பாடி அருகே உள்ள பாரதிநகரை சேர்ந்தவர் அருணாசலம். இவருடைய மனைவி வடிவு (வயது 45). இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. அருணாசலம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பரப்பாடியில் இருந்து சித்தூர் சாலையில் உள்ள தோட்டத்தில் கொலை செய்யப்பட்டார்.

இதுகுறித்து வடக்கு விஜயநாராயணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலையாளிகளை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் வடிவு மட்டும் தனியாக வசித்து வந்தார்.

இந்த நிலையில் வடிவுக்கு, சடையனேரியை சேர்ந்த விவசாயி கல்யாணசுந்தரத்துடன் (67) தொடர்பு ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலேயே சேர்ந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் வடிவுக்கு, கணவர் அருணாசலம் கொலை செய்யப்பட்டு இறந்ததால் அரசு உதவித்தொகை ரூ.8 லட்சம் சில மாதங்களுக்கு முன்பு வழங்கப்பட்டதாக தெரிகிறது. இதற்கிடையே வடிவுக்கு திடீரென்று உடல்நிலை பாதிக்கப்பட்டது. எனவே கல்யாணசுந்தரம், வடிவை சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வடிவுக்கு உடல்நிலை மோசமானதாக கூறி கல்யாணசுந்தரம், வடிவை காரில் ஏற்றி சடையனேரியில் உள்ள தனது வீட்டிற்கு கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று அதிகாலையில் வடிவு திடீரென இறந்துவிட்டார். இந்த தகவல் வடிவின் உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த உறவினர்கள் பணத்துக்காக வடிவை, கல்யாணசுந்தரம் கொலை செய்துவிட்டார் என்றும், வடிவின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும் வடக்கு விஜயநாராயணம் போலீசில் புகார் அளித்தனர். உடனே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெர்லின்பால் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து மர்மசாவு என்று வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com