ஈரோட்டில் மில்லில் பயங்கர தீ விபத்து: பல லட்சம் மதிப்பிலான நூல்-துணிகள் எரிந்து நாசம்

ஈரோட்டில் மில்லில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான நூல், துணிகள் எரிந்து நாசமானது.
ஈரோட்டில் மில்லில் பயங்கர தீ விபத்து: பல லட்சம் மதிப்பிலான நூல்-துணிகள் எரிந்து நாசம்
Published on

ஈரோடு

ஈரோட்டில் மில்லில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான நூல், துணிகள் எரிந்து நாசமானது.

சைசிங் மில்

ஈரோடு பி.பி.அக்ரஹாரம் காமராஜர் நகர் பகுதியில் ஆனந்தன் என்பவருக்கு சொந்தமான சைசிங் மில் இயங்கி வந்தது. இந்த மில்லில் சுழற்சி முறையில் 200-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். மில்லில் நூல் பண்டல்கள் மற்றும் துணிகளை அடுக்கி வைப்பதற்காக 6 குடோன்கள் உள்ளன. இதில் ஒரு குடோனில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் திடீரென கரும்புகை வெளியேறி உள்ளது. பின்னர் சிறிது நேரத்தில் தீ கொழுந்து விட்டு எரிய தொடங்கியது.

அப்போது பணியில் இருந்த ஊழியர்கள் இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். தீயை அணைக்க முயன்றும், அவர்களால் முடியவில்லை. இதனால் அவர்கள் இதுபற்றி ஈரோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். மேலும் ஈரோடு கருங்கல்பாளையம் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

எரிந்து நாசம்

தகவல் கிடைத்ததும் தீயணைப்புதுறை மாவட்ட உதவி அலுவலர் வெங்கடாசலம் மேற்பார்வையில் நிலைய அலுவலர் முத்து குமாரசாமி தலைமையில் 20-க்கும் மேற்பட்ட தீயணைப்பு படை வீரர்கள் 2 வாகனங்களில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் குடோனில் பற்றி எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

எனினும் மில்லில் வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான நூல் பண்டல்கள், துணி பேல்கள் எரிந்து நாசமானது. இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானதாகவும், மின்கசிவு காரணமாக தீ விபத்து நடைபெற்று இருக்கலாம் எனவும் தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.

இதுகுறித்து ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். நேற்று அதிகாலையில் ஏற்பட்ட இந்த தீ விபத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com