

குழம்புவைத்தது, பொரித்தது, வறுத்தது, சுட்டது, கூட்டுவைத்தது என்று விதவிதமாக மீன் சமைத்து, ருசிக்கப்படுகிறது. ஒவ்வொரு வகை மீனையும் வெவ்வேறு வகையாக, வித்தியாசமான கைப் பக்குவத்தில் பெண்கள் சமைக்கிறார்கள். ஊருக்கு ஊர் சமைப்பதில் வித்தியாசமும் இருக்கிறது. அதனால் மீன் சாப்பிடுவதற்காகவே ஊர்தாண்டி செல்பவர்களும் உண்டு. மீன் உணவு மூலம் ருசியும், ஆரோக்கியமும் கிடைக்கவேண்டும் என்றால், மீனை தரம் பார்த்து வாங்குவது முதல் சமைப்பது வரை பல விஷயங்களில் கவனம் செலுத்தவேண்டும்.
எளிதாக ஜீரணமாகக்கூடிய ஏராளமான சத்துக்கள் மீனில் இருக்கின்றன. சிறந்த புரோட்டீன் உணவாகவும் திகழ்கிறது. உடல் எளிதாக ஏற்றுக்கொள்ளக்கூடிய பி-12 வைட்டமின்கள் அதில் இருக்கின்றன. பாதிப்புகள் ஏற்படாத அளவுக்கு இதயத்தை காக்கும் ஒமேகா 3 பாற்றி ஆசிட்டும் மீனில் இருக்கிறது. பயறு வகைகளை சாப்பிட வாய்ப் பில்லாதவர்களுக்கு தேவைப்படும் சத்தை, மீன் மூலம் பெற்றுவிட முடியும்.
சிறிய வகை மீன்களில் கால்சியமும், நுட்பமான சில வித தாது சத்துக்களும் இருக்கின்றன. வைட்டமின் ஏ மற்றும் டி, அயோடின் போன்ற வைகளும் மீனில் இருக்கின்றன. நினைவாற்றலை வளப்படுத்தும் சக்தியும் மீனில் இருக்கிறது. மீனில் குறைந்த அளவில் கார்போஹைட்ரேட் இருக்கிறது. வைட்டமின் சி-யும் இல்லை. இவைகளை தவிர மீதி அனைத்து சத்துக்களும் மீனில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்க விஷயம்.
தரமான மீனை வாங்கினால்தான் முழுமையான சத்துக்களை பெற முடியும். கடற்கரையில், மீன்களை பிடித்த உடன் வாங்குவதுதான் சரியானது. ஞாயிற்றுக்கிழமை பெரும்பாலான ஊர்களில் மீன்பிடிக்க செல்வதில்லை. அப்படிப்பட்ட இடங்களில் வசிப்பவர்கள் திங்கட் கிழமை மீன் வாங்குவதை தவிர்க்கவேண்டும். வெள்ளிக்கிழமையோ, சனிக்கிழமையோ பிடித்த மீன்களே பெரும்பாலும் திங்கட்கிழமை விற்பனைக்கு வருவதாக கூறப்படு கிறது. முட்கள் அதிகமிருக்கும் மீன் களையும், ஆழ்கடலில் பிடிக்கப்படும் பெரிய மீன்களையும் வாங்குவதை தவிர்க்கலாம். முட்கள் அதிகமுள்ள மீன்கள் சாப்பிட சிரமத்தை ஏற்படுத்தும். ஆழ்கடல் மீன்களில் மெர்குரி போன்ற தேவையற்ற ரசாயன பொருட்கள் கலந்திருக்கக் கூடும்.
மீனில் 15 முதல் 23 சதவீதம் புரோட்டீன் இருப்பதால், நமது உடலுக்கு தேவையான புரோட்டீன் சத்துக்கு இதனை பயன்படுத்திக்கொள்ளலாம். மீனில் இருக்கும் புரோட்டீனில் பால், முட்டையில் இருக்கும் புரோட்டீன் அளவுக்கு சமமான அமினோ அமிலம் இருக்கிறது. மீனில் மூன்றுவிதமான அமினோ அமிலங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதில் இருக்கும் புரோட்டீன் புற்றுநோயின் வளர்ச்சியை தடுக்கும் சக்திகொண்டது.
மீன்களின் வகைக்கு தக்கபடி அதில் இருந்து கொழுப்பு (லிப்பிட்) கிடைக் கிறது. காட் அல்லது ஹாடோக் போன்ற பெரிய வகை மீன்களில் இருந்து காட் லிவர் ஆயில் எனப்படும் மீன் எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. அதில் வைட்டமின் ஏ மற்றும் டி சத்துக்கள் அதிகம் இருக்கின்றன. இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், தசைகளின் சக்தி அதிகரிக்கும். எலும்புகளும் பலப்படும். மார்னிங் ஸ்டிப்னெஸ் எனப்படும் அதிகாலை தசைப்பிடித்தம் கட்டுப்படும். அடிக்கடி கோபப்படுகிறவர்கள், அவ்வப்போது மனஅழுத்தத்திற்கு உள்ளாகிறவர்கள் மீனை சாப்பிட்டால், அத்தகைய பாதிப்புகள் குறையும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
மீன்களில் கடல் மீன்கள் சிறந்தவை. அவை இதய நோய் ஏற்படு வதற்கான சூழ்நிலையை குறைக்கிறது. இதயநோய் ஏற்பட்டாலும் அதிக காலம் பிரச்சினையின்றி வாழ வழிவகுக்கிறது. ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை குறைக்கிறது. இதயத்தின் இயக்கத்தை சீராக்கும். ரத்த அழுத்தத்தை சமன்செய்கிறது. மூட்டு நோய்கள், சொரியாசிஸ் போன்ற நோய்களை கட்டுப்படுத்துகிறது.
நீங்கள் எந்த மீனை வாங்கினாலும் அது பிரஷ்ஷான மீன்தான் என்பதை உறுதி செய்யுங்கள். வாங்கிய பின்பு அதில் இருந்து செதில்களை முழுமையாக நீக்குங்கள். தோல் உரிக்கக்கூடிய மீன் என்றால் தோலை நீக்கிவிடுங்கள். மூன்று முறையாவது கழுவுங்கள். கடலைமாவு பயன்படுத்தி கழுவுவது நல்லது. அமோனியா, பார்மலின் நாற்றம் வருகிறதா என்றும் மீன் வாங்கும்போது பாருங்கள்.
உணவியல் நிபுணர்களின் கணிப்புபடி தினமும் 50 கிராம் மீன் சாப்பிடலாம். அதாவது இரண்டு துண்டுகள் போதுமானது. அந்த கணக்குபடி பார்த்தால் வாரத்திற்கு 350 கிராம் மீன் சாப்பிடலாம்.
மீன்கள் அதிக காலம் கெட்டுப்போகாமல் இருக்க பார்மலின், அமோனியா போன்றவைகளை பயன்படுத்துகிறார்கள். இவை ஆரோக்கியத்திற்கு ஏற்றதல்ல. மீன்கள் கெட்டுப் போகாமல் இருக்க ஐஸ் பயன்படுத்தப்படுகிறது. ஐஸ் உருகுவதை தாமதப்படுத்த அதில் அமோனியாவை சேர்க்கிறார்கள். பார்மாலின் திரவ வடிவத்தில் உள்ளது. இது மனித உடல் கெட்டுப்போகாமல் இருக்க பிணவறைகளில் பயன்படுத்தக்கூடியது. அதில் அதிக அளவில் விஷத்தன்மை இருக்கிறது. பார்மலின் கலந்த மீனை சாப்பிட்டால் புற்றுநோய் ஏற்படக் கூடும். ஜீரண மண்டலம், ஈரல், கிட்னி, இதயம், நரம்புமண்டலம், சுவாசமண்டலம் போன்றவைகளின் செயல்பாட்டையும் பாதிக்கும். இப்போது கிட்னி பாதிப்பிற்குள்ளாகும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதற்கு முக்கிய காரணம் பார்மலின் கலந்த மீனை சாப்பிடுவதுதான். அதனால் நீங்கள் சாப்பிடும் மீனில் பார்மலின் கலந் திருக்கிறதா? என்று பார்த்துக்கொள்ளுங்கள்.
ஒரு பக்கெட் நீரில் ஒரு சிறிய கப் அளவு பார்மலின் கலந்தால், அதை பயன்படுத்தி 250 கிலோ மீனை நான்கு நாட்கள் பாதுகாக்கலாம். அதே அளவு மீனை ஐஸ் மூலம் பாதுகாத்தால் அதிக இடமும், அதிக அளவு ஐஸ்ஸூம் தேவைப்படும். பார்மலின் உபயோகிக்கப்பட்ட மீனை எவ்வளவு சுத்தப்படுத்தினாலும் அதன் ரசாயனத்தன்மை அதில் இருந்து நீங்காது.