நெம்மேலி குப்பத்தில் கடல் அரிப்பால் பாதிப்பதாக மீனவர்கள் வேலை நிறுத்தம்

நெம்மேலி குப்பத்தில் கடல் அரிப்பால் பாதிக்கப்படுவதாக கூறி தூண்டில் வளைவு அமைக்கக்கோரி மீனவர்கள் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெம்மேலி குப்பத்தில் கடல் அரிப்பால் பாதிப்பதாக மீனவர்கள் வேலை நிறுத்தம்
Published on

மாமல்லபுரம்,

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நெம்மேலி குப்பத்தில் 200 மீனவ குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மீனவர்கள் தினமும் 40 படகில் சென்று கடலில் மீன் பிடித்து வருவது வழக்கம். இங்கு அடிக்கடி ஏற்படும் கடல் அரிப்பால் மீன்பிடி தொழில் செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டு இவர்கள் இந்த பகுதியில் தூண்டில் வளைவு அமைத்து தாங்கள் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என்று மீன்வளத்துறைக்கு கடந்த 15 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று கரைப்பகுதியில் 10 மீட்டர் தூரத்துக்கு கடல் முன்னேறி வந்து அரிப்பு ஏற்பட்டது. ராட்சத அலை தாக்கியதால் அந்த பகுதி மீனவர்களின் 2 படகுகளும் சேதம் அடைந்தன. 5-க்கும் மேற்பட்ட மீன் பிடி வலைகள் ராட்சத அலையில் மணலில் மூழ்கடிக்கப்பட்டு சேதமடைந்தன.

மீனவர்களும் தங்கள் படகு, மீன் பிடி சாதனங்களை வைக்க இடம் இல்லாமல் அவதிக்குள்ளாகி உள்ளனர். இந்த நிலையில் கடல் சீற்றத்தால் கடல் அரிப்பு ஏற்படாத வகையில் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நேற்று அந்த பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து கடல் அரிப்பால் தாங்கள் பாதிக்கப்படுவதால் மீன்வளத்துறை நிர்வாகம் நெம்மேலி குப்பம் கடற்கரையில் தூண்டில் வளைவு அமைக்கவேண்டும் அல்லது கருங்கற்கள் கொட்டி கடல் அரிப்பை தடுத்து தங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com