

விருதுநகர்,
விருதுநகர் அருகே விலை இல்லாததால் செடிகளில் பறிக்காமல் பூக்கள் விடப்பட்டுள்ளதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.
பூ சாகுபடி
விருதுநகர் அருகே மெட்டுக்கொண்டு கிராமத்தில் விவசாயிகள் பலர் கோழிக்கொண்டை பூ, செண்டு பூ ஆகிய சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர்.
அதிலும் இந்த கிராமத்தில் சில விவசாயிகள் கடந்த காலத்தில் கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் பூ சாகுபடியில் ஆர்வம் கொண்டு இந்த பணியை மேற்கொண்டு வருகின்றனர். அதிலும் சமீபகாலமாக சாகுபடிக்கு தேவையான தண்ணீர் இல்லாத நிலையிலும் மிகுந்த சிரமத்துடன் பூக்களை சாகுபடி செய்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனா பாதிப்பால் கோவில்களை முக்கிய நாட்களில் திறக்க அனுமதி இல்லாத நிலையிலும், பண்டிகை கொண்டாட வாய்ப்பு இல்லாத நிலையிலும், பூக்களின் தேவை வெகுவாக குறைந்துள்ளது.
விலை குறைவு
இதனால் பூக்களின் விலையும் வெகுவாக குறைந்துள்ளது. வழக்கமாக கோழிக்கொண்டை பூ, செண்டு பூ ஆகியவை கிலோ ரூ.40 முதல் ரூ.50 வரைவிலை இருந்தது. ஆனால் தற்போது கிலோ ரூ.10-க்கு கூட கேட்பதற்கு ஆள் இல்லாத நிலை உள்ளது. விவசாயிகள் சந்தைக்கு பூக்களை கொண்டு சென்றால் கேட்க ஆளில்லாமல் பூக்களை அப்படியே வேதனையில் அங்கேயே விட்டு, விட்டு வரும் நிலையும் உள்ளது.
இதனால் மெட்டுக்குண்டுகிராமத்தில் பூக்கள் சாகுபடி செய்யும் விவசாயிகள் பொருளாதார ரீதியில் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். எனினும் செய்த சாகுபடியை விட்டு விட மனமில்லாமல் தொடர்ந்து இந்த பூ சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நம்பிக்கை
வரும் நாட்களிலாவது வழிபாட்டுத்தலங்கள் வழக்கம்போல் திறந்து வைக்கப்படும் நிலையில் பூக்களுக்கு தேவை அதிகரித்து நல்ல விலை கிடைக்கும் என்றும், தங்களுக்கும் பாதிப்பு விலகும் என்றும் பூ வியாபாரிகள் நம்பிக்கையுடன் பூ சாகுபடியை தொடர்ந்து செய்து வருகின்றனர்.
இதுகுறித்து விவசாயி சேகர் கூறியதாவது:-
பொருளாதார இழப்பு ஏற்பட்டாலும் பூ சாகுபடியினை விட்டுச்செல்ல மனம் இல்லை. பூக்களுக்கு விலை இல்லாததால் பூக்கள் பறிக்கப்படாமல் செடிகளிலேயே கருகி உதிரும்நிலை உள்ளது. விலை இல்லாததால் ஒரு சில விவசாயிகள் செடிகளில் பூக்களை பறிக்காமல் அப்படியே விட்டு விட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.