

நொய்யல்,
பூக்கள்
கரூர் மாவட்டம் நொய்யல், மரவாபாளையம், குளத்துப்பாளையம், வேட்டமங்கலம், ஓலப்பாளையம், ஒரம்புப்பாளையம், நல்லிக்கோயில், கொங்குநகர், பேச்சிப்பாறை, நடையனூர், கவுண்டன்புதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் குண்டு மல்லி, முல்லை, அரளி, சம்பங்கி, ரோஜா, செவ்வந்தி உள்ளிட்ட பல்வேறு பூக்களை பயிர் செய்துள்ளனர். பூக்கள் பூக்கும் தருவாயில் வரும்போது கூலி ஆட்கள் மூலம் பூக்களை பறித்து லேசான கோணிப் பைகளில் போட்டு உள்ளுர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், அருகாமையில் உள்ள பரமத்தி வேலூரில் செயல்பட்டு வரும் தினசரி ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.
ஏலம்
பூக்களை ஏலம் எடுப்பதற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து தங்களுக்கு கட்டுப்படியாகும் விலைக்கு பூக்களை ஏலம் எடுத்து செல்கின்றனர். வாங்கிய பூக்களை பல்வேறு ரகமான மாலைகளாகவும், உதிரிப் பூக்களாகவும், தோரணங்களாகவும் விற்பனை செய்து வருகின்றனர்.
சில வியாபாரிகள் வாங்கிய உதிரி பூக்களை பிளாஸ்டிக் கவரில் போட்டு பாக்கெட்டுகளாக உள்ளூர் பகுதிகளுக்கு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.
விலை உயர்வு
இந்நிலையில் கடந்த வாரம் குண்டு மல்லி ஒரு கிலோ ரூ.300-க்கும், முல்லை ரூ.350-க்கும், அரளி ரூ.120-க்கும், செவ்வந்தி ரூ.150-க்கும், ரோஜா ரூ.150-க்கும், சம்பங்கி ரூ.60-க்கும் விற்பனையானது.
இந்தநிலையில் நேற்று குண்டு மல்லி ஒரு கிலோ ரூ.550-க்கும், முல்லை ரூ.600 க்கும், அரளி ரூ.180-க்கும், ரோஜா ரூ.200-க்கும், செவ்வந்தி ரூ.270-க்கும், சம்பங்கி ரூ.120-க்கும் விற்பனையானது. பூக்களின் வரத்து குறைவாலும், தேவை அதிகரிப்பதாலும், அமாவாசையை முன்னிட்டும் பூக்களின் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.