

தென்காசி:
வரத்து அதிகரித்ததால் தென்காசியில் பூக்கள் விலை கடும் சரிவை சந்தித்து உள்ளது. ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டது.
கொரோனா
கொரோனா 2-வது அலை தற்போது தீவிரமாக பரவி வருகிறது. நாடு முழுவதும் இதனால் பாதிக்கப்பட்ட ஏராளமானோர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதன் பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
அந்த வகையில் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு அரசு தடை விதித்து வருகிறது. கோவில்களில் பூஜைகள் மட்டும் நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் பக்தர்கள் கோவிலுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
வரத்து அதிகரிப்பு
மேலும் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு குறைவான நபர்களை அனுமதிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. மதம் சார்ந்த திருவிழாக்கள் நடத்தவும், குடமுழுக்கு நடத்தவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. கோவில்கள் மற்றும் இதுபோன்ற விழாக்களில் பூக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
பூக்கள் இல்லாமல் எந்த விழாக்கள், பூஜைகள் எதுவும் நடத்த முடியாது.
ஆனால் இந்த நிகழ்ச்சிகள் இல்லாததால் வழக்கமாக நடைபெறும் பூ விற்பனை மிகவும் குறைந்துள்ளது. பூக்களின் வரத்து அதிகமாக உள்ளது. ஆனால் விற்பனை இல்லாததால் விலை மிகவும் குறைந்துள்ளது.
விலை சரிவு
தென்காசியில் கடந்த சில நாட்களாக மல்லிகை பூ ஒரு கிலோ ரூ.300-க்கு விற்பனையானது. தற்போது ஒரு கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே போல் ரூ.400-க்கு விற்ற பிச்சிபூ ரூ.250-க்கும், ரூ.100-க்கு விற்ற சம்பங்கி பூ ரூ.30-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல் நந்திவெட்டை பூ ரூ.100-ல் இருந்து ரூ.20-க்கும், ரூ.300-க்கு விற்ற கேந்தி பூ ரூ.100-க்கும், ரோஜா பூ ஒரு பாக்கெட் ரூ.40-ல் இருந்து ரூ.15-க்கும் விலை சரிந்து உள்ளது.
நேரத்தை அதிகரிக்க வேண்டும்
இதுகுறித்து தென்காசியை சேர்ந்த பூ வியாபாரிகள் அழகுராஜ், தங்கராஜ் ஆகியோர் கூறுகையில், தற்போது கொரோனா பரவல் காரணமாக பூ விற்பனை மிகவும் குறைந்து விட்டது. இதனால் நாங்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி உள்ளோம். கோவில்கள் அடைக்கப்பட்டு விட்டன. கேரளாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் கேரளாவிற்கு பூக்கள் அனுப்ப முடியவில்லை. பூக்களின் வரத்து அதிகமாக இருந்தாலும் விற்பனை இல்லாததால் வீணாக கொட்டப்படுகின்றன.
தற்போதைய அரசு பகல் 12 மணி வரை பூக்கடைகளுக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. இதற்காக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் இந்த நேரத்தை இன்னும் அதிகரித்து கொடுத்தால் எங்களுக்கு மிகுந்த பயனாக இருக்கும் என்றனர்.