நாமக்கல்லில் பூக்கள் விலை சரிவு: மல்லிகை கிலோ ரூ.200-க்கு விற்பனை; விவசாயிகள் கவலை

நாமக்கல்லில் கடந்த சில நாட்களாக பூக்கள் விலை சரிவடைந்து வருகிறது. மல்லிகை கிலோ ரூ.200-க்கு விற்பனையாவதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
நாமக்கல்லில் பூக்கள் விலை சரிவு: மல்லிகை கிலோ ரூ.200-க்கு விற்பனை; விவசாயிகள் கவலை
Published on

பூக்கள் விலை

நாமக்கல் மாவட்டம் மோகனூர், சேந்தமங்கலம், எருமப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவில் பூக்கள் பயிர் செய்யப்பட்டு உள்ளன. இந்த பூக்கள் நாமக்கல் பஸ்நிலையத்தில் உள்ள தினசரி பூ மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. இவற்றை வியாபாரிகள் வாங்கி சென்று நகர் முழுவதும் விற்பனை செய்கின்றனர்.

அந்த வகையில் நேற்று நாமக்கல் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை குறைந்ததால் அதன் விற்பனை விறுவிறுப்பாக நடந்தது. மல்லிகை பூ கிலோ ரூ.200-க்கும், அரளி கிலோ ரூ.50-க்கும், சம்பங்கி கிலோ ரூ.80-க்கும், கேந்தி கிலோ ரூ.60-க்கும் விற்பனை செய்யப்பட்டன.

விவசாயிகள் கவலை

இதுகுறித்து பூ வியாபாரி ஒருவர் கூறியதாவது:- நாமக்கல் பூக்கள் மார்க்கெட்டில் கடந்த மாதம் தொடக்கத்தில் மல்லிகை கிலோ ரூ.1,000 வரை விற்பனையானது. கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கிலோ ரூ.600-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் கடந்த சில நாட்களாக கிலோ ரூ.200-க்கு மட்டுமே விற்பனையாகி வருகிறது.

இந்த மார்க்கெட்டுக்கு வழக்கமாக 1 டன் பூக்கள் விற்பனைக்கு வரும். ஆனால் தற்போது 3 டன் வரை பூக்கள் விற்பனைக்கு வருகிறது. பூக்களின் வரத்து ஏறத்தாழ 3 மடங்கு அதிகரித்து உள்ளது. இதுவே பூக்களின் விலை சரிவுக்கு காரணம் ஆகும். இவ்வாறு அவர் கூறினார். பூக்களின் விலை நாளுக்கு நாள் சரிவடைந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com